அத்தியாயம்-16
(புகைப்படங்களுடன் இந்த கட்டுரையை வாசிக்க எனது Blogger site: www.kadalganesan.blogspot.com தளத்துக்கு வாருங்கள்.. )
கப்பல் இப்போது இந்தியப் பெருங்கடலில் சென்று கொண்டிருந்தது.
அன்று மாலை கப்பலில் வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து வெட்ட வெளியில் கரிஅடுப்பு வைத்து நெருப்பு ஏற்படுத்தி, ‘பார்-பெ-க்யூ’ பார்ட்டியை கொண்டாட இருந்தார்கள்.
அன்று நிலநடுக்கோட்டைத் தாண்டும் விழாவும் சேர்ந்து இருந்ததால், எல்லோரும் சந்தோஷத்தில் இருந்தார்கள்.
கேப்டன் உட்பட எல்லோரும் கப்பலின் தங்குமிடத்துக்கு வெளியே உள்ள ஒரு தளத்தில் விழாக் கொண்டாட எல்லா ஏற்பாடுகளும் செய்தார்கள். கப்பலின் சின்ன ‘SWIMMING POOL’-ல் தண்ணீர் நிரப்பப் பட்டது.. கடல்நீர் தான்.
பாசஞ்சர் கப்பல் வாழ்க்கைக்கும், சரக்குக் கப்பல் வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.. ஏராளமான ஆட்கள் இருப்பதால் பயணிகள் கப்பல்களில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும்..
ஆனால் சரக்குக் கப்பல்களில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமே இருப்பதால், தனித்தீவில் மாட்டிக் கொண்ட உணர்வு எழுவது இயற்கை.
இதையெல்லாம் தணித்து வைப்பதற்கு, இப்படி எல்லோரும் ஒன்று சேர்ந்து, மியூசிக்கை அலறவிட்டுக் கொண்டும் இஷ்டத்துக்கு டான்ஸ் ஆடிக் கொண்டும், அவரவர்க்கு வேண்டியதை அவர்களே பாதி வெந்தும், மீதி வேகாமலும் சமைத்து, சாப்பிட்டுக் கொண்டே ஆல்கஹாலில் குளியல் நடத்தும் இந்த ‘பார்-பெ-க்யூ’ பார்ட்டிகள் உபயோகமாக இருக்கின்றன.
பிரிட்டிஷ் மற்றும் பிலிப்பினோ நாட்டவர்களுக்கு சொல்லவே வேண்டாம்.. மதியத்திற்கு மேல் யாரும் சரியாக வேலை செய்யவில்லை.
பார்ட்டியின் உற்சாகம், அதைக் கொண்டாடும் விதம் எல்லாம் அந்தக் கப்பலில் அப்போது இருக்கும் கும்பலைப் பொருத்தது.. அதிலும் கேப்டனின் குணத்தைப் பொருத்தது.
இந்தக் கப்பலில் கேப்டன் பிரிட்டிஷ்காரர்.
பொதுவாக பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் பணியாளர்களுக்கு இசையில் ஏகப்பிரியம்.. உற்சாகமாக (நம் தமிழ் சினிமாவின் மோகன், முரளி ரேஞ்சுக்கு) மைக்கைக் கையில் எடுத்தால் விடவே மாட்டார்கள்.
அந்தக் கப்பலில் இருந்த பெரிய ‘மியூஸிக் ஸிஸ்டம்’ வெளியே வந்திருந்தது. எலக்ட்ரிக் கிதார் வாசிக்கும் ஜெஸ்ஸி என்ற மாலுமி மாலையிலிருந்தே பயிற்சி செய்து கொண்டிருந்தான்.
காலி பெயிண்ட் டப்பாக்களாலும், கெமிக்கல் டிரம்களாலும் உருவாக்கப் பட்டிருந்த ‘டிரம் ஸெட்’ கம்பீரமாக நடுவில் இருந்தது. இஞ்ஜின் அறையில் இருந்து ‘உபயோகமற்றது’ என்று தூக்கி எறியப்பட்ட பழைய ‘ஏர் கம்ப்ரஸர்’ வால்வு பிளேட்டுகள் கூட இசைக் கருவிகளாய் மாறிப்போய் இருந்தன..
கப்பலில் உபயோகமில்லாமல் தூக்கி எறிந்திருந்த பொருட்கள் எல்லாம் அங்கே உருமாறி இசைக் கருவிகளாகி இருந்தன.
பெரிய இசைக்கச்சேரிக்கு தயார் செய்வதைப் போல் பிலிப்பினோ மாலுமிகள் உற்சாகமாக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
ஆறு மணிக்கு எல்லோரும் அங்கே இருந்தார்கள்.. சிலர் மாறு வேஷம் போட்டிருந்தார்கள்.. அரசன் போல் வேஷமணிந்திருந்தவர் கடல் அரசன் ‘நெப்டியூன்’. அவருக்கு அருகே அரசியின் வேடத்தில் கவுன் போட்டுக் கொண்டு இன்னொரு மாலுமியின் பெண் வேஷம்.
போலீஸ்காரர் போல் தோற்றமுடைய இருவர்.. ‘டாக்டர்’ என்று எழுதப்பட்ட பெட்டியைச் சுமந்து கொண்டு இன்னொருவர்.. இப்படி விதவிதமாய்..
நான் ‘இதெல்லாம் என்ன வினோதம்’ என்று வியந்து கொண்டிருந்தேன்.. ஆனால் அன்றைய முக்கிய விருந்தாளியே நானும் ரோஹினியும் தான்..
‘என்ன அது நிலநடுகோட்டைத் தாண்டும் விழா’ என்று முன்பே கேட்டேன் பலரிடம்.. ஆளுக்காள் பல கதைகள் சொன்னார்கள்.. வயதான மாலுமி ஒருவர் அவருக்குத் தெரிந்த கதையைச் சொன்னார்.
பழைய காலத்தில் கடலில் ஏற்படும் சீற்றங்கள் எல்லாம் கடல் அரசனான ‘நெப்டியூனின்’ கோபத்தின் காரணமாகவே ஏற்பட்டதாகக் கருதி, அவனைச் சமாதானப் படுத்தும் முயற்சியாக பலியிடும் வழக்கம்கூட இருந்ததாம்.
அந்தக் காலத்தில் கப்பல்களில் அடிமைகளையும், கைதிகளையும் ஏற்றிச் செல்லும் வழக்கம் இருந்ததால், அவர்களை நிலநடுக்கோட்டை கடக்கும்போது நெப்டியூனைத் திருப்தி படுத்த பலியிட்டார்களாம்.
வரலாற்றைப் பார்த்தால், இயல்பிலேயே கப்பல் மாலுமிகள் இதுபோன்ற மூட நம்பிக்கைக்களை(superstitious) அதிகம் நம்புபவர்கள் என்பது தெரியும். இந்த விழாவைக் கொண்டாடும் நோக்கமே, கடலுக்கு ராஜாவான நெப்டியூனின் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்காகத் தான்.
இந்த விழாவின் போது, மாலுமிகள் தங்களை வித்தியாசமான உடையணிந்து கொள்வார்கள். தங்கள் உடம்பை பழைய உணவுப் பொருட்களாலும், கடலில் கிடைக்கும் பல்வேறு பொருள்களாலும் அலங்காரம் செய்து கொள்வார்கள்..
நெப்டியூனின் மனதைக் குளிர்விக்கவே இந்த விழா. இப்படி செய்தால் தங்கள் பயணத்திற்கு கடல் அரசன் ஆசி வழங்குவார் என்றும் நம்பினார்கள்.
இந்தக் கதைகளில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால் அந்தப் பழக்கங்களின் தொடர்ச்சியாக இப்போது புதிதாக கப்பலில் சேரும் எல்லோருக்கும் முதல்முதலில் கோட்டைக் கடக்கும்போது அவர்களை அலங்கோலமாக்கி சில சடங்குகள் செய்வார்களாம்.
அது என்ன சடங்கு என்பதை மட்டும் அந்த மாலுமி சொல்ல மறுத்து விட்டார். ‘நீதான் நேரிலேயே அனுபவிக்கப் போகிறாயே’ என்றார்.
எல்லாம் செய்து முடித்த பின் ‘சர்ட்டிபிகேட்’ ஒன்றும் தருவார்கள்.. அடுத்த கப்பலில் சேரும்போது, தனக்கு ஏற்கனவே விழா நடத்தி பூமத்திய ரேகையைக் கடந்த அனுபவம் இருப்பதை நிரூபிப்பதற்காக இந்த சர்ட்டிபிகேட்.. அது இல்லாவிட்டால் நம்பாமல் மறுபடியும் செய்ய வேண்டியிருக்கும்..
‘அதென்ன சடங்குகள்’ என்று ஜோவிடம் கேட்டுப் பார்த்தேன்.. ‘ரத்தப்பலி’ என்றான் அவன் காதுக்குள் மெதுவாக..
எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.. என்ன செய்யப் போகிறார்களோ என்று பயமாகவும் இருந்தது.
ஆறரை மணிக்கு விழா ஆரம்பித்தது. என்னையும் ரோஹினியையும் வேறுவேறு இடத்தில் எங்காவது போய் ஒளிந்து கொள்ளச் சொன்னார்கள்.
கப்பலுக்கு கடல் அரசன் நெப்டியூன் தன் மனைவியுடன் வந்திருப்பதாக அறிவிப்பு செய்தார்கள். கேப்டன் கப்பலின் முன்பகுதிக்குச் சென்று சகல மரியாதையுடன் நெப்டியூனை வரவேற்கச் சென்றார்.
நான் இஞ்ஜின் அறையில் ஒரு இயந்திரத்தின் பின் ஒளிந்து கொண்டேன்.. ஐந்து நிமிடத்தில் என்னைக் கண்டுபிடித்து சங்கிலியால் பிணைத்து நெப்டியூனின் முன்னால் மண்டியிட வைத்தனர்.
ரோஹினியையும், ஒரு சங்கிலியால் கட்டி இழுத்து வந்து கைதியைப் போல் நெப்டியூனின் முன் நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தினார்கள்.
முதலில் என்மீது குற்றப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. அதையெல்லாம் பார்க்கும்போது சிரிப்பாகவும் இருந்தது..
முதல் நாள் பார்ட்டியில் குடிக்க மறுத்ததிலிருந்து, இஞ்ஜின் அறையில் செய்த சின்னச் சின்ன தவறுகள் எல்லாம் லிஸ்ட்டில் இருந்தன. ரோஹினியின் மீது பெரிய லிஸ்ட்டே இருந்தது.. ‘சார்ஜ் ஷீட்’டின் நகல் அவளிடம் வழங்கப் பட்டது.
‘கடல் அரசன் நெப்டியூனின் முறையான அனுமதியில்லாமல் பூமத்தியரேகையைக் கடந்ததற்காக குற்றவாளியாக நிறுத்தப் பட்டுள்ளாய். மேலும் தன் மனைவியை என்னுடய அனுமதியில்லாமல் கப்பலில் கூட்டி வந்துள்ள உன் கணவன் அருணும் இதனால் குற்றவாளி ஆகிறான்..
அவனுக்கும் உன்னுடன் சேர்த்து தண்டனை வழங்கப் படுகிறது. நீ என்னுடைய மனைவியை விட அழகாக இருப்பதால் அதற்காகவும் தண்டனை உண்டு..(!?).
நீ ஒரு சுத்த வெஜிடேரியன். அதனால் கறி, மீன் எதுவும் சாப்பிடுவதில்லை என்று கேள்விப்பட்டேன்.. மீன்களுக்கெல்லாம் ராஜாவான என்னையும் என் ராஜ்ஜியத்தில் உள்ள அனைத்து மீன் இனத்தையும் அது அவமதித்த குற்றமாகிறது.
இதைத்தவிர உன் மேல் இன்னும் நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன.. இதற்கெல்லாம் தண்டனையை ஏற்றுக் கொள்கிறாயா?’ என்று கேட்டு அவள்மீது குற்றப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது..
அவள் குற்றங்களை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னாள்.. பெரிய மீன் ஒன்றைத் தொங்கவிட்டு இருந்தார்கள்.. அவளை அதை முத்தமிடச் சொன்னார்கள்.
பின் எங்களை தனித்தனி நாற்காலியில் உட்கார வைத்து தலையில் என்னென்னவோ கலவையைக் கொண்டு வந்து ஊற்றினார்கள்..
அழுகிய முட்டை, மீன், தக்காளி, பீர், வினிகர் என்று எல்லாம் கலந்த கலவை.. முகத்தில் வழிந்து கண்கள் இரண்டும் அந்தக் கலவையில் மறைந்து போனது.
யாரோ இரண்டு முறை என் தலையில் முட்டையை உடைத்து விட்டுப் போனார்கள்.. எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பது காதில் கேட்டது.
“ஓ.கே தயாள் தாஸ்.. நீ உன் வேலையை ஆரம்பிக்கலாம்..” என்று யாரோ சொல்வது கேட்டது.. தயாள்தாஸ் ஒரு மாலுமி.. பிலிப்பினோ என்றாலும் தந்தை ஒரு இந்தியர்.. அதனால் இந்தியப் பெயர் அவருக்கு..
அவர் என்னை என்ன செய்யப் போகிறார்.. மெதுவாக சிரமப்பட்டு கண்களைத் திறந்து பார்த்த நான் அதிர்ந்து போனேன்..
தயாள்தாஸ் ஒரு கத்தியுடன் என்னை நோக்கி வருவது தெரிந்தது.. பயத்துடன் திமிறிக் கொண்டு எழ முயற்சி செய்தேன்..
பக்கத்தில் நின்ற இருவர் என்னை அப்படியே அழுத்திப் பிடித்தனர்.. கத்தியோடு தயாள் தாஸ் நெருங்க நான் நிஜமாகவே பயத்தின் உச்சகட்டத்தில் இருந்தேன்.. கற்பனையில் என்னன்னவோ தோன்றின..
“ஏய் பயப்படாதே… உன்னை எதுவும் செய்ய மாட்டார் தயாள்தாஸ்.. உன் தலைமுடியை வெட்டத்தான் அவர் வருகிறார்..” என்று ஜோ என் அருகே வந்து சொன்னான்..
அப்போதுதான் நன்றாகக் கவனித்தேன்.. தயாள்தாஸ் கையில் ‘ஷேவிங்’ செய்ய உபயோகிக்கும் கத்தி.. கூடவே கத்தரிக்கோல்.. அவர் பார்பர் வேஷத்தில் இருந்தார்.
“உனக்கு மொட்டை அடிக்கவா.. இல்லை பாதி தலைமுடியை மட்டும் வெட்டவா..”
‘அடப்பாவிகளா.. என் தலைமுடியை வெட்டப் போகிறார்களா?.. இது என்ன அலங்கோலம்’.
எனக்கு தப்பிக்க வேண்டும் என்று தோன்றியது.. என்னைப் பிடித்து அழுத்தியிருந்தவர்களை விலக்கிக் கொண்டு திமிறினேன்.
(தொடரும்- புகைப்படங்களுடன் இந்த கட்டுரையை வாசிக்க எனது Blogger site: www.kadalganesan.blogspot.com தளத்துக்கு வாருங்கள்.. இங்கே புகைப்படங்களை வலையேற்றுவ்தில் சிரமம் உள்ளது எனக்கு. நன்றி- கடல் கணேசன்)