அத்தியாயம் -15
கப்பலில் புதிதாக சேர்ந்தவர்களை ஏமாற்றுவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா..
இங்கே எல்லாமே புதுமை என்பதால் இவர்கள் சொல்வதில் எது உண்மை, எது பொய் என்று கண்டுபிடிப்பது சிரமம்.அதனால் நான் பூமத்தியரேகை விஷயத்திலும் ஏமாந்து போனேன்.
பிரேஸிலில் இருந்து புறப்பட்டு, அட்லாண்டிக் கடலில் செல்லும்போது அந்த ரேகையை இரவில் கடப்பதாக இருந்தது..
எலக்ட்ரிக்கல் இஞ்ஜினீயர் அன்று மாலையே என்னிடம், “ராத்திரி சீக்கிரம் தூங்கி விடாதே.. பூமத்திய ரேகையை வாழ்க்கையில் முதல்முறையாக பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுவாய்” என்றார்..
பூமத்திய ரேகையை பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது பூகோள ‘மேப்’பில் பார்த்து இருக்கிறேன்.. அது ஒரு கற்பனைக் கோடு என்று மட்டுமே தெரியும். (மிகவும் பிடிக்காத பாடம் புவியியல் தான்.. கடைசியில் தண்டனை போல், உலகத்தை நேரில் சுற்றிப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியதாகி விட்டது.)
கப்பலில் சூரியன், நட்சத்திரம், கோள்கள் எல்லாம் பார்த்து, கப்பல் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிப்பதெல்லாம் ‘நேவிகேஷன்’ துறையைச் சேர்ந்தவர்களின் வேலை.. இன்ஜினீயர்களுக்கு அதில் சம்பந்தம் இல்லை.
அதிலும் நான் புதிதாக சேர்ந்திருந்ததால் அது பற்றி கொஞ்சம்கூட தெரியாது அப்போது.
“எப்படி சரியாக இந்த இடத்தில் தான் அந்த ரேகை இருக்கிறது என்று துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்?..” என்று கேட்டேன்.
நான் கேட்டவுடன் என்னை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தார் அவர். பின் அவரே பதில் சொல்லிக்கொண்டார்.
“இந்தக்காலத்துப் பசங்களுக்கு எதுவுமே தெரிவதில்லை.. இது கூடவா தெரியாது”.. என்று சொல்லிவிட்டு, “நிஜமாகவே உனக்குத் தெரியாதா” என்று கேட்டார்.
“தெரியாது” என்றேன்.
“பூமத்திய ரேகை என்பது ஒரு கற்பனைக் கோடு தான்.. ஆனால் அப்படி ஒரு கோடு இருப்பதாக நினைத்துக் கொள்வதால் தான் கப்பல் இருக்கும் இடத்தை சரியாக குறிப்பிட்டு சொல்ல முடியும்…
பூமத்திய ரேகை உள்ள கோட்டுப் பகுதி ஜீரோ டிகிரி.. அதற்கு மேல்பகுதி வடக்கு, கீழ்பகுதி தெற்கு. கப்பல் பூமத்தியரேகைக்கு எத்தனை டிகிரி தள்ளி வடக்கிலோ, தெற்கிலோ உள்ளது என்பதை உலக வரைபடத்தில் குறிக்கலாம்..
ஆனால் உலகத்தில் பூமத்தியரேகைப் பகுதியை அடையாளம் காண்பதற்காக, ஒவ்வொரு மைல் தொலைவிலும் அந்தப்பகுதியில் அமைந்துள்ள நாடுகள், கரையை ஒட்டிள்ள தங்களது கடல்பகுதியில் மட்டும், ஒளிரக்கூடிய ஒரு கெமிக்கல் பூசிய மிதவைகளை அந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள்.. இரவில் மட்டும் அவை ஒளிரும்.. இதுகூட கேள்விப் பட்டதில்லையா?”
சத்தியமாக நான் கேள்விப்பட்டதில்லை.. நீங்கள்?
“அது மட்டுமில்லை.. அந்த மிதவைகளில் எழுதப்பட்டிருக்கும் “WELCOME TO EQUATOR” என்ற வார்த்தைகளும் ராத்திரியில் ஒளிரும்.. இன்னிக்கு ராத்திரி நீ பார்க்க மறந்திடாதே.. நாம் பிரேஸில் கடற்கரை ஓரமாக போவதால் இந்தப் பகுதியில் பிரேஸில் நாட்டின் சார்பில் அமைக்கப் பட்ட மிதவைகள் இருக்கும்” என்று சொல்லிவிட்டு, “இந்தக் காலத்து இளைஞர்களுக்கு எல்லாமே சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது..” என்று அலுத்துக் கொண்டார்.
எங்கள் ஊருக்கு (ராமேஸ்வரம்) பக்கத்தில் உள்ள பாம்பன் பாலத்தருகே கடலில் வைக்கப் பட்டுள்ள மிதவைகளைப் பார்த்திருக்கிறேன்.. மற்ற துறைமுகங்களிலும் பாறை இருக்கும் இடம், ஆழமற்ற பகுதி இவற்றைத் தவிர்த்து கப்பல் துறைமுகத்துக்குள் செல்ல வேண்டிய சரியான வழியைக் குறிப்பதற்காக மிதவைகள் உண்டு என்பது தெரியும்.
ஆனால் நிலநடுக்கோடு பகுதியைப் பற்றி சரியாக தெரியாது.. ..
பூமத்திய ரேகை பூமியை வடக்கு தெற்காக இரண்டாகப் பிரிக்கும் ஒரு கற்பனைக் கோடு என்பது மட்டும் படித்திருக்கிறேன். அதற்காக இப்படியெல்லாம் அந்த இடத்தை அடையாளம் காண மிதக்கும் கருவிகள் எல்லாம் வைத்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டதில்லை.
அன்று இரவு இரண்டு மணியளவில் அந்தக் கோடு இருக்கும் பகுதியை கடக்க இருப்பதாகச் சொன்னார். நான் அதற்காக இரவு தூங்காமல் விழித்திருந்தேன்.
நல்ல இருட்டு.. இரண்டு மணிக்கு கூர்ந்து கவனித்தேன்.. தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது.. எனக்குள் மெலிதான பரபரப்பு.. ஆனால் மறுபடியும் பார்த்த போது அது எங்கோ தொலைதூரத்தில் இருந்தது.. பக்கத்தில் வேறு எந்த மிதவையும் தெரியவில்லை..
குழப்பத்துடன் மேலே ‘பிரிட்ஜ் ஹவுஸ்’ பகுதியான கப்பலின் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றேன்.. இரண்டாவது நேவிகேட்டிங் ஆபிஸர் இருந்தான்.. கூடவே துணைக்கு ‘ஸ்டீயரிங் வீல்’ பிடிக்கும் ‘சுக்கானி’ என்ற மாலுமி.(ஆங்கிலத்தில் Helmsman என்று அழைக்கிறார்கள்..)
கப்பலை திருப்புவதற்குப் பயன்படும் ‘RUDDER’ என்ற பெரிய இரும்பாலான பலகை போன்ற அமைப்பு, கப்பலின் பின்புறம், PROPELLOR-க்கு பின்னால் இருக்கும்.. வீல் ஹவுஸ் பகுதியிலுள்ள ‘ஸ்டீயரிங்’ சக்கரத்தைச் சுற்றுவதன் மூலம் அந்தப் பலகையைத் திருப்பும் போது கப்பல் இடப்புறமோ, வலப்புறமோ திரும்பும்..
சின்னப் படகுகளில் கூட அதைப் பார்க்கலாம்.. ஹிந்தியில் அதை ‘சுக்கான்’ என்பார்கள்.. (எங்கள் ஊரில் தமிழிலும் அப்படித்தான் சொல்கிறார்கள்).
கப்பலின் (ஸ்டீயரிங் வீலைத் திருப்பி) சுக்கானை இயக்குபவருக்கு அதனால் ‘சுக்கானி’ என்று பெயர் வந்தது..
இன்னும் கொஞ்சம் டெக்னிக்கல் விஷயம்: கப்பலை இயக்குவதற்கு பெரிய சைஸில் ஒரே ஒரு மெயின் எஞ்ஜின் உண்டு.. (மிகச் சில கப்பல்களில், குறிப்பாக பாசஞ்சர் கப்பல்களில், இரண்டு எஞ்ஜின்கள் உண்டு..)..
அந்த எஞ்ஜின் இயங்கும்போது அதனுடைய ‘க்ராங்க் ஷாஃப்ட் (Crank Shaft)டுடன் இணைக்கப் பட்டுள்ள ஃபேன் போன்ற அமைப்பிலான ‘ப்ரொப்பல்லர்’ சுழலும்..
அதன் சுழற்சியால் -மின் விசிறியிலிருந்து காற்று தள்ளப்படுவது போல்- தண்ணீர் பின்னுக்குத் தள்ளப்படும் . ப்ரொப்பல்லருக்கு பின்னால் உள்ள Rudder திருப்பப் படாமல் இருந்தால் தண்ணீர் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அதன் காரணமாக கப்பல் முன்னுக்குப் போகும்..(நியூட்டன் விதி).
‘ரட்டர்’ பலகை ஏதாவது ஒரு பக்கம் திருப்பப்பட்டால் தண்ணீர் அதன்மீது மோதி, அதற்குத் தகுந்தாற்போல் கப்பல் இடமோ, வலமோ திரும்பும்.. இப்படித்தான் கப்பலைத் திருப்ப முடிகிறது.. கப்பலை கார் நிறுத்துவது போல் உடனே நிறுத்த முடியாது..
தரையில் உராய்வுத்தன்மை (Friction) இருப்பதால், காரை வேகமாக நிறுத்த முடிகிறது.. தண்ணீரில் அது மிகக் குறைவு.. கப்பலுக்கு ‘பிரேக்’க்கும் கிடையாது.. கப்பலை நிறுத்த வேண்டுமானால் எஞ்ஜினை முதலில் நிறுத்தி, எஞ்ஜினின் சுழற்சியை எதிர்திசையில் சுழலுமாறு செய்தால் முன்னால் செல்லும் கப்பல் வேகம் குறையும்..
அதன்பின் பின்னால் செல்ல முயற்சிக்கும்.. அந்த நேரத்தில் எஞ்ஜினை நிறுத்தி விடுவதன் மூலம் கப்பலை நிறுத்த முடியும்.. முழுவதும் நிற்க நிறைய நேரம் பிடிக்கும்
கப்பல்கள் மோதிக் கொண்டதாக செய்திகள் வருவது கப்பலை உடனடியாக நிறுத்த வழி இல்லாததால் தான்..
நான் மேலே போனபோது வீல்ஹவுஸ் முழுதும் இருட்டாக இருந்தது..
பொதுவாக இரவு நேரத்தில் கப்பலின் வீல்ஹவுஸ் இருட்டாகவே இருக்கும்.. கப்பல் முழுதும் பார்த்தால் இருட்டாகவே தெரியும்.. (எஞ்ஜின் அறை முழுதும் விளக்குகள் உண்டு.. ஆனால் அந்த வெளிச்சம் வெளியே தெரிவதில்லை..).. அப்படி இருட்டாக இருந்தால் தான் வெளியே இருட்டில் வரும் வேறு கப்பல்களைப் பார்க்க முடியும்..
கப்பலின் முன் பக்கத்தில் ஒரு விளக்கும், பின்னால் ஒரு விளக்கும் இருக்கும்.. அதைத் தவிர கப்பலின் தங்கும் தளப்பகுதியின் இடதுபுறத்தில் சிவப்பு விளக்கும், வலது புறத்தில் பச்சை விளக்கும் பொருத்தப் பட்டிருக்கும்.. (விமானத்திலும் இதே போல உண்டு).
இந்த விளக்குகளின் ஒளியை வெகு தொலைவில் இருந்தும் பார்க்க முடியும்.. வேறு வெளிச்சம் தடையாக இருந்தால் இந்த விளக்குகளை அடுத்த கப்பலில் உள்ளவர் சரியாக பார்க்க முடியாது..
எனவே எதிரே தெரியும் கப்பல் அருகே வருகிறதா அல்லது விலகிச் செல்கிறதா என்பது தெரியாமல் குழப்பம் ஏற்படும்.
அதனால் தான் கப்பலில் இரவு நேரங்களில் வேறு எந்த வெளிச்சமும் தெரியாத அளவில் வைத்திருப்பார்கள்.. அறையில் எரியும் விளக்கின் வெளிச்சம் வெளியே தெரியாமல் இருக்க, திரைச்சீலைகள் உள்ளன.. பொதுவாக அறை விளக்கை அணைத்து விடுவதே வழக்கம்.
எனவே, நான் கப்பலின் ‘வீல்ஹவுஸ்’ பகுதிக்கு போனபோது வெளிச்சம் இல்லாததால் தடுமாறினேன்.. சிறிது நேரம் கழித்து கண்கள் இருட்டுக்குப் பழக்கப் பட, மெதுவாக இரண்டாவது ஆபிஸர் மோஹித்தைக் கண்டுபிடித்தேன்.
அவன் ஏற்கனவே இதுவரை இருட்டில் இருந்ததால் நான் வருவதை நன்றாகவே பார்த்திருக்கிறான்.. நான் தடுமாறுவதை சிரித்துக் கொண்டே பார்த்து இருந்திருக்கிறான். அவன் அருகே போனேன்..
“ஏன் இன்னும் தூங்காமல் இருக்கிறாய்?”- என்று கேட்டான் மோஹித்.
நான் பூமத்திய ரேகையைப் அடையாளம் காண்பதற்காக வைக்கப் பட்டிருக்கும் ஒளிரும் மிதவைகளை பார்ப்பதற்காக இருப்பதைச் சொன்னேன்..
அவன் சிறிது நேரம் கழித்து “பார்த்து விட்டாயா?” என்றான்.
நான் தொலைவில் தெரிந்த வெளிச்சத்தைப் பார்த்ததை மட்டும் சொன்னேன்.. அவன் தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தைக் காட்டி “அதுவா?” என்று கேட்டான்..
ஒரே ஒரு வெளிச்சம் தான் தெரிந்தது தூரத்தில்..
“ஆமாம்”-நான் அதைக் கை காட்டினேன்.
“நீ இப்போது பார்பபது வேறொரு கப்பலின் வெளிச்சம்.. ஒளிரும் மிதவை அல்ல.. ” என்றான்..
“பூமத்திய ரேகையை அடையாளம் கண்டுபிடிக்க உனக்கு தெரியுமா.. எந்த இடத்தில் அந்த கோடு வரும் பகுதி உள்ளது என்று எப்படி அடையாளம் காண்பாய்?”- அவன் என்னைத் திருப்பிக் கேட்டான்.
மாலையில் எலக்ட்ரிக்கல் எஞ்ஜினீயர் சொல்லியிருந்த மிதவையும், ‘வெல்கம் டு ஈக்குவேட்டர்’ எழுத்துக்களையும் பற்றிச் சொன்னேன்..
நான் சொல்லி முடித்தவுடன் அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.. எனக்கு புரிந்து போனது.. நான் முட்டாளாக்கப் பட்டதை தெரிந்து கொண்டேன்.
அப்படி எதுவும் உலகின் எந்தக் கடல்பகுதியிலும் இல்லையென்றும் என்னை ஏமாற்ற அப்படி சொல்லியிருந்தார் என்றும் தெரிந்து கொண்டேன்..
பின் அவனே அங்கிருந்த நவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் வரைபடங்களைக் காட்டி கடலில் கப்பல் இருக்கும் இடத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று விவரித்தான். அந்த வரைபடத்தில் அருகே உள்ள பிரேஸில் கடற்கரைப் பகுதி மற்றும் அதையொட்டிய கடல் பகுதி காட்டப் பட்டிருந்தது..
பூமத்திய ரேகையும் வரைபடத்தில் காட்டப்பட்டிருந்தது. பூமத்தியரேகை பூமியை இரண்டாகப் பிரிக்கும் ஒரு கற்பனைக் கோடுதான் என்றாலும், அது உள்ள பகுதியை உண்மையில் இரண்டு மணிக்கு கப்பல் கடந்ததையும் தெரிவித்தான்.
கப்பலின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள உதவும் ‘ஜி.பி.எஸ்’ (G.P.S- Global Positioning System) என்னும் கருவியைக் காட்டினான்.. அதில் கப்பலின் தற்போதைய இடம், துள்ளியமாக டிஜிட்டல் எண்களாகத் தெரிந்தது..
“இந்த கருவியில் வடக்கு தெற்கு திசையைக் குறிப்பிடும் எண் இருக்கும் இடத்தில் சரியாக ஜீரோ வரும் இடம் தான் பூமத்திய ரேகை உள்ள இடம்.. சற்று முன் அதைக் கடந்தோம்..”
அப்போது அந்த சாதனத்தில், பூமத்திய ரேகைக்கு தெற்கே எத்தனை டிகிரியில் கப்பல் உள்ளது என்பதைக் காட்டவும், கிரீன்விச் கோட்டுக்கு மேற்கே எத்தனை டிகிரியில் உள்ளது என்பதைக் காட்டும் எண்களும் திரையில் தெரிந்தன..
மேஜை மீது இருந்த வரைபடத்தைக் காட்டி, கப்பல் அந்த வரைபடத்தில் எந்த இடத்தில் உள்ளது என்பதை புள்ளியிட்டுக் குறித்துக் காட்டினான்.
இப்போதைய நவீன கருவிகள் இல்லாத பழைய நாட்களில் சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் இதர கோள்களை அடையாளம் கண்டு அதன் உதவியுடன் கப்பல் இருக்கும் இடத்தை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை விளக்கினான். எனக்கு அப்போதுதான் புரிந்தது..
விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் இன்று அது எவ்வளவு சுலபமாகவும், துல்லியமாகவும் கண்டுபிடிக்கப் படுகிறது என்பதையும் சொன்னான்.. கேட்கக் கேட்க மிகவும் ஆச்சர்யமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது..
விண்ணிலே தெரியும் நட்சத்திரக் கூட்டங்களை அடையாளம் கண்டுபிடித்து அவற்றின் பெயர்களைச் சொன்னான்.. பூமியும் மற்ற கோள்களும் உள்ள நமது சூரிய மண்டலத்தை உள்ளடக்கிய Milky Way என்ற நமது ‘பால் வீதி’யை எனக்குக் காட்டினான்.
தினமும் இரவில அவனுடைய டியூட்டி நேரத்தில் வீல் ஹவுஸிற்கு வந்தால் இன்னும் நிறைய விஷயங்கள் பற்றி சொல்லிக் கொடுப்பதாகச் சொன்னான். எல்லாம் தெரிந்து கொண்டு தூங்கப் போகும் முன் மூன்று மணியாகி விட்டது..
அன்றைய தினத்தை வாழ்வில் மறக்கவே முடியாது.. அதன்பின் கப்பலில் யாராவது புதிய விஷயங்கள் சொன்னால் நான் உடனடியாக நம்புவதேயில்லை. (ஆனால் அதன்பின், நானும் புதிதாக சேர்பவர்களை வேடிக்கைக்காக இதேபோல் சொல்லி நிறைய ஏமாற்றியிருக்கிறேன்..)
மறுநாள் கப்பலில் எல்லோரும் என்னைக் கேலியாக பார்த்து சிரித்தனர். நான் இரண்டு மணி வரை விழித்திருந்து, பூமத்திய ரேகையின் ஒளிரும் எழுத்துக்களை ‘பார்த்தது’ எல்லோருக்கும்
தெரிந்து விட்டிருந்தது..
முதல்முறை அட்லாண்டிக் கடலில் அந்தக் கோட்டை கடந்தபோது என்னை இப்படித்தான் ஏமாற்றினார்கள்.. ஆனால் ‘பூமத்திய ரேகையை’ நான் அதிகாரப் பூர்வமாக கடந்ததாக ஏற்கப்பட்டு, அதற்கான சர்ட்டிபிகேட் வழங்கப்படும் முன் நடந்த விழா ஒரு வேடிக்கையான திருவிழா.. கப்பல் வாழ்வில் மறக்கவே முடியாத இன்னொரு முக்கிய நாள் அது..
நான் என்னுடைய தலைமுடியை முழுதும் மொட்டையடித்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது அன்று..
(தொடரும்)