நீங்கள் நேர்மையானவரா.. வாழ்க்கையில் நேர்மையை விடவே மாட்டேன் என்ற பிடிவாத கொள்கை உடையவரா?.. பாராட்டுக்கள்..
உங்களைப் போலவே கடைசி வரை எந்த சந்தர்ப்பத்திலும் நேர்மையாகத்தான் வாழ்வேன் என்ற கொள்கையுடன் இருந்த அரசு ஊழியர் நந்தகோபாலின் (பெயர் மாற்றம் செய்துள்ளேன்- நிஜ பெயர் வேறு.) வாழ்க்கையைப் படியுங்கள்..
இது நடந்து பல வருடங்கள் ஆனாலும், நந்தகோபாலின் வாழ்க்கை எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.. சொல்லப்போனால் எங்கே போனாலும் லஞ்சம் தலைவிரித்து ஆடும், இந்தக் காலத்துக்கு மிகவும் பொருந்தும்.
எப்போதும் நேர்மை தவறாமல் இருப்பேன் என்று பிடிவாதமாக இருந்தால் அதன் பின்விளைவுகளையும் சந்திக்க தயாராகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த அனுபவக் கட்டுரை..
அதிக லஞ்சம் புரளும் ஒரு அரசு அலுவலகத்தில், பெரும்பாலான மேலதிகாரிகளுக்கு நேரடியாக லஞ்சம் கொடுக்க முடியாது.. அவர்களுக்குக் கீழே உள்ள ‘திறமை’யான உதவியாளர்கள் மூலம்தான் எல்லா ‘வேலைகளும்’ நடத்தப்பட்டு காரியம் விரைவில் முடிக்கப்படும்..
நந்தகோபால் லஞ்சம் அதிகம் விளையாடும் ‘தொழிற்சாலைகள் ஆய்வுத் துறையில்’(Factory inspection Departmernt) தேர்வு நிலை உதவியாளராக(selection grade assistant) பணியில் இருந்தார்.. பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்த அனுபவம்.. மிக நேர்மையான அலுவலர் என்று பெயர் வாங்கியவர்.
சிவகாசி பற்றி சொல்ல வேண்டியதில்லை.. பட்டாசு, தீப்பெட்டி, ‘பிரிண்ட்டிங் ப்ரஸ்’ போன்ற பல தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரம்.. அங்கே உள்ள தொழிற்சாலை ஆய்வுத்துறையின் அலுவலகத்தில் தான் அவர் வேலை செய்தார்.
எதிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த அவருடைய குணத்தால், அவரது மேலதிகாரிக்கு சிக்கல்..
‘தானும் அனுபவிக்காமல் அடுத்தவனையும் அனுபவிக்க விடாமல் செய்கிறாரே’ என்று எரிச்சல் பட்ட மேலதிகாரி அவரை பழிவாங்க சமயம் பார்த்தார்..
ஒருமுறை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நீண்ட விடுப்பில் போனார் நந்தகோபால். மீண்டும் உடல்நிலை சரியில்லாது போகவே விடுமுறையை நீட்டித்தார்..
அதில் தான் பிரச்னை.. இரண்டாவது முறை நீட்டிப்புக்கு நந்தகோபாலை மாவட்ட மருத்துவமனைக்கு சென்று ரிப்போர்ட் வாங்கி வரச் சொன்னார் மேலதிகாரி..
அரசாங்க விதிப்படி ஒரு ஊழியர் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அதிக நாள் விடுப்பு எடுப்பதாக உயர் அதிகாரி கருதினால் அவருக்கு உண்மையிலேயே உடல்நிலை சரியில்லை என ‘மாவட்ட மருத்துவ அதிகாரி’ அலுவலகத்தில் சான்றிதழ் வாங்கி வரச் சொல்ல உத்தரவு இடலாம் என்ற விதி ஒன்று உண்டு..
ஆனால் அது குறிப்பிட்ட சிலநாட்களுக்கு மேல் போனால் தான் மேலதிகாரி அப்படி உத்தரவு இடமுடியும்.. நந்தகோபாலின் கேஸில் அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தான் விடுப்பு எடுத்து இருந்தார்.. எனவே உயர் அதிகாரி அவரை பரிசோதனைக்கு போகச் சொன்னது நியாயமே இல்லை, விதிமுறையின் கீழ் தவறு என்பது அவர் வாதம்..
பொதுவாகவே நேர்மையான ஆட்களிடம் கொஞ்சம் பிடிவாதம் அதிகமாக இருக்கும்.. நந்த கோபாலிடமும் அது கொஞ்சம் அதிகமாகவே இருந்தது..
” நான் ஏன் மருத்துவ அதிகாரியிடம் போகவேண்டும்.. விதிப்படி போக வேண்டிய அவசியம் இல்லை.. அப்படி ஒரு விதி இருந்தால் குறிப்பிடுங்கள்.. நான் உங்கள் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறேன்..” என்று உயர் அதிகாரிக்கு சவால் கடிதம் எழுதினார்..
உயர் அதிகாரிக்கு பயங்கர கோபம்.. ஆனால் விதிப்படி நந்தகோபாலை மருத்துவ பரிசோதனை செய்யச் சொன்னது தவறு என்று அவருக்கும் தெரியும். ஆனால் அவர் இப்படி ஒரு சவால் கடிதம் எழுதுவார் என்று எதிர்பார்க்கவில்லை.. அதனால் நந்தகோபாலுக்கு பதில் எழுதவில்லை..
கடைசியில் விடுமுறை முடிந்து டியூட்டியில் சேரப் போனபோது, மீண்டும் சேர்வதற்கான உத்தரவு (Joining order) வழங்க மறுத்தார் மேலதிகாரி..(அந்த உத்தரவு இல்லாமல் பணியில் சேர முடியாது அரசு அலுவலகத்தில்..)
நந்தகோபாலின் பிடிவாதம் ஒருபக்கம், உயர் அதிகாரியின் ஆணவம் இன்னொரு பக்கம்.. காலம் தான் போனது.. ஒருவருடத்துக்கு மேல் அவர் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் முறையிட்டும்கூட எதுவும் நடக்கவில்லை..
மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தால், பரிசீலனை செய்வதாக சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப் பட, நந்தகோபால் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்ய.. கடைசியில் பாதிக்கப் பட்டது நந்தகோபால் மட்டுமே.
எல்லா இடத்திலும் முட்டி மோதிப் பார்த்து விட்டார்.. யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை.. அவர் சம்பந்தப் பட்ட பைல் மூலையில் தூங்கியது..
வேலையில்லாமல் எத்தனை நாள் தான் குடும்பத்தை நடத்த முடியும்.. முடிந்த வரை கடன் வாங்கி, சில மாதங்கள் சமாளித்தார்.. ஒரு கட்டத்தில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லை என்ற நிலை.. கடன் கொடுத்தவர்கள் வீட்டு வாசல் தேடி வந்து அவமானம் செய்ய, அவர் மனைவி செய்த முடிவு அதிர்ச்சியானது.. அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள்..
அவரின் மனைவி, தன் மூன்று பெண்களையும் இழுத்துக் கொண்டு ரயில் முன் விழுந்து தற்கொலை முயற்சி செய்யவே போய் விட்டார்.. அது இன்னொரு துயரக் கதை.. ஒருவழியாக யாரோ பார்த்து காப்பாற்ற.. அன்று நான்கு உயிர்கள் காப்பாற்றப் பட்டன..
வேறு வழியில்லாமல் ஒரு மாவு அரைக்கும் மில்லில் தினக்கூலி வேலை செய்ய ஆரம்பித்தார்..
அப்போது நான் ஸ்ரீவில்லிபுத்தூர் பொறியியற் கல்லூரியில் கடைசி ஆண்டு பரீட்சை முடித்து விட்டு ஊருக்குச் செல்ல இருந்தேன்.. ஜூனியர் விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக இருந்த காலம் அது.. யாரோ ஒரு நண்பர் மூலமாக இந்த பிரச்னை தெரியவந்தது..
நந்தகோபால் பக்கம்தான் நியாயம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.. பிரச்னைக்குரிய அந்த உயர் அதிகாரியையும் சந்தித்து அவர் பக்க நியாயத்தையும் கேட்கப் போனேன்..
“நீங்கள் வக்கீல் மாதிரி கேள்வி கேட்கிறீர்கள்.. உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..” என்று பதில் வந்தது..
முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு சென்னை தலைமை அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் கையில் என்று தெரிந்தது..
சென்னையில் உள்ள தலைமை தொழிற்சாலைகள் ஆய்வுத் துறை அலுவலகம்-
நான் எவ்வளவோ வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் செவி சாய்ப்பதாக இல்லை..
“அரசாங்க விதிப்படி நந்தகோபால் செய்தது தவறு இல்லையே.. பின் ஏன் அவருக்கு பணி உத்தரவு வழங்க மறுக்கிறீர்கள்?”- நான்.
“ஒரு உயர் அதிகாரி என்ன சொன்னாலும் அதை நிறைவேற்ற வேண்டியது கீழே உள்ள ஊழியரின் கடமை”- அந்த ‘உயர் அதிகாரி’.
“என்ன கட்டளை இட்டாலும் செய்ய வேண்டுமா ?”
“ஆமாம்.. அதுதான் அரசு விதி.. அரசாங்க ஊழியர் மேலதிகாரி சொல்வதை கேள்வி கேட்காமல் நிறைவேற்ற வேண்டியது தான் கடமை.. எதிர்க் கேள்வி கேட்க இடமில்லை..”
“நான் உங்கள் மேலதிகாரியாக இருந்து உங்களை ‘ஒருவரிடம் இருந்து லஞ்சம் வாங்க வேண்டும்’ என்று உத்தரவு இட்டாலும் நீங்கள் என் கட்டளையை ஏற்று செயல் படுத்த வேண்டுமா..”
“நீங்கள் இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. இந்த மாதிரி பிரச்னையில் என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்கு விதிமுறைகள் உண்டு.. அதன்படி அவருக்கு வேலை உத்தரவு விரைவில் வழங்கப்படும்.. நாங்கள் உத்தரவு அனுப்புவோம்..” என்றார்.
இருப்பதிலேயே அது தான் தலைமை அலுவலகம்.. உத்தரவு அங்கு இருந்துதான் போக வேண்டும்.. அவர்களிடம் முறையிட்ட பின் வேறு வழியில்லை என்று தோன்றியது..
அவர்கள் சொல்வதை ஏற்று நந்தகோபாலிடம், ‘கிட்டத்தட்ட இரண்டு வருடம் பொறுத்தாயிற்று.. இன்னும் சில நாட்கள் பொறுங்கள்.. உத்தரவு வரும்’ என்று செய்தி தெரிவித்தேன்.
இதற்கிடையில் சென்னையில் வேறு ஒரு வேலையில் சேர வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.. ஒரு வருட மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி முடிந்து, அந்த ஆண்டின் ‘மிகச்சிறந்த மாணவ பத்திரிக்கையாளர்’களில் ஒருவராக தேர்வு செய்யப் பட்டதால், விகடனில் தொடர்ந்து பத்திரிக்கையாளனாக பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது..
ஆனால் படித்த பொறியியற் கல்விக்கு இன்னொரு இஞ்ஜினீயரிங் கம்பெனியில் வேலை கிடைத்ததால் முழுநேர பத்திரிக்கையாளனாக தொடர்ந்து பணி செய்ய வாய்ப்பு இல்லாததால் ‘பகுதி நேர’ பத்திரிக்கையாளன் பணி மட்டும் செய்தேன்.
சில நாட்கள் கழித்து நந்தகோபாலிடம் இருந்து தகவல்.. ‘இன்னும் உத்தரவு வழங்கப் படவில்லை’ என்றார்.
அடுத்து என்ன செய்ய முடியும்?.. பத்திரிக்கையில் தான் எழுதியாக வேண்டும்.. வேறு வழியில்லை.. ஆனால் அதற்கு முன்பு கடைசியாக இன்னொரு முறை கதவைத் தட்டிப் பார்க்கலாம் என்று தோன்றியது..
ஆனால் இந்த முறை தலைமை ஆய்வாளர் அலுவலகத்தில் அல்ல.. அதற்கும் மேலே யார் இருக்கிறார்களோ, அந்த இடத்தில்..
வழக்கமாக அமைச்சர் தான் அதற்கு மேல்.. அப்போது தமிழ்நாட்டில் சில மாதங்கள் கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது , எம்.ஜி.ஆர் இறந்தபின்..
அமைச்சர் யாரும் இல்லாததால், ஆளுநருக்கு உதவியாக இருந்த அவரது ஆலோசகர்கள் தான் தமிழ்நாட்டை நிர்வாகம் செய்து வந்தனர்..(சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான திரு. ராமகிருஷ்ணா மற்றும் திரு. பத்மநாபன்).
கவர்னர் அலுவலகத்தில் ஆலோசகர் பத்மநாபனை சந்திக்கும் படி ஆலோசனை வழங்கப்பட்டது.. மிக நேர்மையான, திறமையான அதிகாரி என்று கேள்விப் பட்டிருந்தேன்- அவரைப் பற்றி..
(அவர் கடைசியாக மிசோராம் மாநில கவர்னராகவும் பணியாற்றியதாக நினைவு.. செய்தியில் பிழையிருந்தால் திருத்திக் கொள்கிறேன்).
சந்திக்க உடனே நேரம் கொடுத்தார்.. ஐந்து நிமிட நேரம் நந்தகோபாலின் பிரச்னை குறித்து அவருக்கு விளக்கினேன்…
அவர் பக்கம் உள்ள நியாயத்தைச் சொல்லி, இதனால் அவர் அனுபவித்த துன்பங்கள், அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் தற்கொலை முயற்சி எல்லாம் எடுத்துச் சொல்லி, விரைவில் அவருக்கு வேலைக்கான பணி உத்தரவு கிடைக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன்.
பிரச்னை சம்பந்தப் பட்ட எல்லா கடித விவரங்களையும், அவர் கேட்ட தகவல்களையும் காட்டினேன்..
சில வினாடிகள் யோசித்தார்.. தொலைபேசியை கையில் எடுத்தார்.. அடுத்த வினாடி அங்கிருந்தே பறந்தது உத்தரவு..
“அறைக்கு வெளியே என் செயலாளர் இருப்பார்.. அவரை சந்தியுங்கள்.. மற்றவற்றை அவர் கவனித்துக் கொள்வார்”- என்று புன்னகையுடன் விடை கொடுத்தார்..
நன்றி சொல்லி விட்டு அவரது செயலாளரை (ஐ.ஏ.எஸ் அதிகாரி தான் அவரும்) சந்திக்கச் சென்றேன்..
நான் போகும் முன்பே அவருக்கு திரு. பத்மனாபன் உத்தரவு வழங்கியிருந்தார்.. என்னை வரவேற்று அமரச் செய்தார்.. தொலைபேசியை எடுத்து யாருக்கோ பேசினார்…
“நோ.. தவறு உங்கள் பக்கத்தில் தான் உள்ளது.. எந்த விளக்கமும் தேவையில்லை.. முதலில் இன்று மாலைக்குள் அவருக்கு உத்தரவு வழங்குங்கள்.. இல்லையேல் உங்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்ப வேண்டியிருக்கும்.. ஆர்டர் அனுப்பி விட்டு எனக்கு தகவல் தெரிவியுங்கள்… இன்று மாலைக்குள்” – எனக்கு புரிந்தது, அது தொழிற்சாலை தலைமை ஆய்வாளருக்கான உத்தரவு என்று..
என்னை காத்திருக்கச் சொன்னார்.. ஒருமணி நேரம் கழித்து அவரை மீண்டும் சந்தித்த போது “எல்லாம் முடிந்தது.. நந்தகோபாலுக்கு தந்தி மூலம் ஆர்டர் அனுப்பப்படும்.. நீங்கள் அவருக்கு தகவல் தெரிவிக்கலாம்.. நாளை காலையில் மறுபடியும் வந்து பாருங்கள்.. ‘ஆர்டர் காப்பி’ உங்களுக்கு தருகிறேன்” என்றார்..
ஒரு பெரிய நிம்மதி.. நந்தகோபாலிடமிருந்து தகவல் வந்தது -ஆர்டர் வழங்கப்பட்டதாக.. உடனடியாக ராமநாதபுரத்தில் போய் பணியில் சேரும்படி..
மறுநாள் காலை தலைமைச் செயலகம் போய் திரு.பத்மநாபனுக்கும், அவரது செயலாளருக்கும் நன்றி தெரிவித்தேன்..
அந்த செயலாளர் பின்னால் பதவி உயர்வு பெற்று தமிழ்நாட்டின் உள்துறை செயலாளர் பதவியும் வகித்தார்.. இப்போதும் உயர்ந்த பதவியில் உள்ளார்- தமிழக முதலமைச்சரின் செயலாளராக..
ஆமாம்.. சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.சையது முனீர் ஹோடா தான் அவர்.
———————
அந்த நிகழ்ச்சியில் இருந்து நான் கற்றுக் கொண்டது ஒன்று உள்ளது.. அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் எந்த பிரச்னை என்றாலும் கீழ்நிலை அதிகாரிகளிடம் கெஞ்சக் கூடாது என்று.. நேரடியாக மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களை மட்டுமே சந்திப்பது என்ற பாடம் தான் அது..
நேர்மையாக வாழ நினைத்த நந்தகோபால் பட்ட துன்பங்களை இப்போதும் மறக்க முடியவில்லை.. பத்திரிக்கையாளனாக இருந்ததால் மட்டுமே அவருக்கு நீதி கிடைக்க உதவி செய்ய முடிந்தது.. அதுவும் பத்மநாபன் போன்ற நல்ல அதிகாரிகள் இருந்ததால் தான் அதுவும் சாத்தியமானது..
பத்திரிகையாளனாக இருப்பதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி இம்மாதிரி காரியங்களை சிலசமயம் செய்ய முடிகிறதே என்பது தான்..
Pradeep said,
November 24, 2006 at 6:24 pm
KG sir,
U mentioned abt Nandagopal getting his job back.
But u didn’t tell abt his officer? Did he get any punishment?
Then only there is some reason of being honest
கடல்கணேசன் said,
November 25, 2006 at 8:10 pm
வணக்கம் ப்ரதீப் சார்,
உண்மை தான்.. அந்த மேலதிகாரியை எந்த விதத்திலும் தண்டிக்க முடியவில்லை என்பது உண்மைதான்.
அரசாங்கத்தின் ‘சிவப்பு நாடா’ அவ்வளவு சுலபத்தில் எதையும் செய்ய விடாது.. அந்த விஷயத்தில் நிறைய சட்ட சிக்கல்கள் வந்து விட்டன.. எல்லாவற்றையும் பதிவில் எழுத முடியவில்லை.
நேர்மையாக இருப்பதில் சிரமங்கள் அதிகம் தான்..
நந்த கோபாலுக்கு வேலை பெற்றுத் தருவதே மிகப் பெரிய காரியமாகத் தான் இருந்தது.. நடந்த அனைத்தையும் நான் விளக்கவில்லை. பதிவின் நீளம் கருதி சுருக்கி வெளியிட்டேன்..
உங்கள் கருத்துக்கு நன்றி..
எனது இன்னொரு வலைத்தளமான http://www.kadalganesan.blogspot.com பகுதியில் இதே கட்டுரை வெளியிட்டுள்ளேன்.. அந்தக் கட்டுரையில் உங்களைப் போல கேட்ட சிலருக்கு பதில் அளித்துள்ளேன். நேரம் வாய்த்தால் அங்கே வாசிக்கவும்.
மேலும் எனது இந்த வானவில் வலைத்தளத்தில் புதிய கட்டுரைகள் இட்ம் பெறாது.. எனது ‘www.kadalganesan.blogspot.com தளத்துக்கு வந்து செல்லும் படி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.