அத்தியாயம்-14
கப்பல் பிரேஸிலில் இருந்து தென் ஆப்பிரிக்காவிலுள்ள ‘கேப் டவுன்’ துறைமுகத்துக்குப் புறப்பட்டது.
ஆனால் கேப் டவுனில் துறைமுகத்துக்குள்ளே கப்பல் செல்ல வேண்டிய அவசியமிருக்கவில்லை. ஹெலிகாப்டர் மூலம் நான்காவது இஞ்ஜினீயர் அருணின் மனைவி ரோஹினியும், புதிய சீஃப் இஞ்ஜினீயரும் வந்து சேர்வதாக இருந்தது.
ஆப்பிரிக்க கண்டத்தின் தென்மேற்குக் கோடியான ‘கேப் ஆஃப் குட் ஹோப்’ (Cape of Good Hope) எனப்படும் ‘நன்னம்பிக்கை முனை’க்கு அருகே கேப் டவுன் உள்ளது. இந்தப்பகுதிக்கு வந்தபின் தான் ‘வாஸ்கோடகாமா’ இந்தியாவிற்கான கடல் வழியைக் கண்டிபிடித்தார்.
எங்கள் கப்பல் போனபோது அந்தப் பகுதியில் கடல் சிறிது கடுமையாக மாற ஆரம்பித்தது. எப்போதும் இங்கே இப்படித்தான் கடல் ஆக்ரோஷமாக இருக்கும் என்றார்கள்.
கேப்டவுன் துறைமுகத்துக்கு வெளியே கப்பல் வேகத்தைக் குறைத்து புதிய சீஃப் இஞ்ஜினீயரையும், ரோஹினியையும் ஏற்றிக் கொண்டு சிங்கப்பூர் புறப்பட்டது.. பழைய சீஃப் அதே ஹெலிகாப்டரில் திரும்பிவிட்டார்.
முதன்முதலில் கப்பலில் சேர்வதால் அருணின் மனைவி மிகவும் பயந்துபோய் இருந்தாள். கடலில் அனுபவம் இல்லாதவர்களை, கப்பலில் சேர்ந்த ஆரம்ப காலத்தில் நிறையவே ஏமாற்றுவார்கள்.
நான் சேர்ந்த புதிதில் கப்பலில் சாப்பிட்டதற்கும், தண்ணீர், கரண்ட், ஏ.ஸி மற்றும் வாஷிங் மெஷின் உபயோகித்ததற்காக, விடியோ மற்றும் டிவி உபயோகித்தது என்று எல்லாவற்றையும் பட்டியலிட்டு முதல் மாத இறுதியில் கேப்டன், சீஃப் இஞ்ஜினீயர் கையெழுத்திட்டு, சுமார் நானூறு அமெரிக்க டாலர் பில் எனக்கு தந்தார்கள்.
என்னுடைய ஜூனியர் எஞ்ஜினீயருக்கான அப்போதைய சம்பளத்தில் கிட்டத்தட்ட பாதித்தொகை. அதை எனது சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்வதாகவும், மாதாமாதம் இதேபோல் பிடித்துக் கொள்வார்கள் என்றும் சொன்னார்கள்..
கப்பலில் சேரும்போது இதற்கெல்லாம் பணம் கட்ட வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. அன்று மாலையில் எல்லோரும் என்னைக் கிண்டலடித்து கேலிசெய்து, அதெல்லாம் பொய் என்றும் என்னை ஏமாற்றவே அப்படி திட்டம் போட்டு பில் தயார் செய்ததாகச் சொல்லவும் எனக்கு நிம்மதி வந்தது.
பொதுவாக கப்பலில் வேலை செய்பவர்கள் எதற்கும் செலவு செய்ய வேண்டியிருக்காது. சம்பாதிக்கும் பணத்தை முழுதும் சேமிக்கலாம். துறைமுகத்தில் வெளியே போகும்போது நாமாகவே வாங்கும் பொருட்களுக்கான விலை, மற்றும் அப்போது வெளியே சுற்றிய போக்குவரத்து மற்றும் வெளியே சாப்பிட்ட உணவுக்கான செலவுதான் மொத்த செலவு.
துறைமுகத்தில் வெளியே எங்கும் தங்குவதெல்லாம் முடியாது.. திரும்பக் கப்பலுக்கு வந்துவிட வேண்டும்..
(கப்பலில் வேலை செய்பவர்கள் ஊர் திரும்பும் போது வாங்கி வரும் பொருட்களை ‘சுங்கவரி’ எதுவும் கட்டாமல் கொண்டு வந்து விடுவார்களா என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.. அப்படி எதுவும் இல்லை.. அவர்களும் இந்தியக் குடிமக்களுக்கு உள்ள வரிகளை கட்டித்தான் பொருட்களை கொண்டு வரமுடியும்.)
கப்பலில் தங்கியிருக்கும் போது செலவு என்றால் அது நாம் குடிக்கும் குளிர் பானத்துக்கும், மதுபானத்திற்கும் செலவழிக்கும் பணம் மட்டுமே..
‘உங்களுக்கெல்லாம் கப்பலில் ‘டிரிங்க்ஸ்’ ஃபிரீ தானே.. நன்றாக அனுபவிக்கலாம் இல்லையா’ என்று ஏராளமானோர் கேட்கிறார்கள்.. வணிகக் கப்பலில் மது இலவசம் இல்லை.. ஆனால் ‘டியூட்டி ஃப்ரீ’ அடிப்படையில் கிடைப்பதால் கொஞ்சம் விலை குறைவு. ஆனால் அதற்காக இஷ்டப்படி குடிக்கமுடியாது..
ஒரு அளவுக்கு மேல் யாராவது குடிப்பதாகத் தெரிந்தால், அதன்பின் மதுவே குடிக்கக் கூடாது என்று கேப்டன் தடை செய்து விடமுடியும். இப்போது கட்டுப்பாடுகள் மிக அதிகம். ‘Drug and Alcohol Policy’ கடுமையாக இப்போதைய கப்பல்களில் கடைபிடிக்கப் படுகிறது. குடிப்பதை கட்டுப்படுத்தும் முயற்சி இது.
கப்பலில் சேர்ந்த புதிதில் என்னை ஏமாற்றியது போலவே ரோஹினியையும் ஏமாற்றத் திட்டமிட்டனர். சேர்ந்த மறுநாளே விளையாட்டு ஆரம்பித்து விட்டது.
அவள் கப்பலில் சேர்ந்தபோது அந்த மாதத்துக்கான பில்லைத் தயார் செய்து அருணுக்கு வழங்கி விட்டனர். எவ்வளவு தெரியுமா.. சுமார் ஐநூறு டாலர்கள்.
அடுத்த நாள் காலை இஞ்ஜின் அறையில், பில் பற்றி ரோஹினி என்ன சொன்னாள் என்று எல்லோரும் அருணைக் கேட்டனர். அந்தத் தொகையைப் பார்த்து மிகவும் ‘ஷாக்’ ஆகி விட்டாளாம். அவனுடைய மொத்த சம்பளம் ஆயிரத்து அறுநூறு டாலர்கள்.. அதைத்தான் ஊரில் இருக்கும்போது அவளிடமும் சொல்லியிருக்கிறான்.
இப்போது அதில் ஐநூறு டாலர்கள் கப்பல் செலவுகளுக்கே கட்ட வேண்டியதை நினைத்து மலைத்துப் போய் விட்டாளாம்.. அன்று மதியம் சாப்பாட்டுக்கு அவள் டைனிங் ஹாலுக்கும் வரவில்லை. அருண் மட்டும் தலையில் அடித்துக் கொண்டே வந்தான்.
“என்ன நடந்தது.” என்று கேட்டேன்.
“எல்லாம் நேற்று நடந்த விஷயத்தின் விளைவுதான்.. அந்த பில் செய்யும் வேலை” என்றான்.
பனிரெண்டு மணி டியூட்டி முடிந்து மதியம் அவன் அறைக்குத் திரும்பியபோது, ரூம் முழுவதும் இருட்டாக இருந்ததாம். பாத்ரூமில் உள்ள ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்க, ரோஹிணி அவனது துணிகளை தானே சோப்புப் போட்டுத் துவைத்துக் கொண்டு இருந்திருக்கிறாள்.
அருண் போய், அறைவிளக்கை போட்டதுதான் தாமதம்.. ‘அதுதான் கண்ணாடி ஜன்னல் வழியே வெளிச்சம் வருகிறதே.. எல்லா விளக்கையும் போட்டு எலக்ட்ரிக் பில்லை ஏன் வீணாக கட்ட வேண்டும்’ என்று கோபப்பட்டிருக்கிறாள்.
கூடவே, “இனிமேல் உங்கள் துணிகளை வாஷிங் மெஷினில் துவைக்க வேண்டாம்.. நானே ரூமில் வைத்து கையால் துவைத்துக் கொள்கிறேன்.. பணத்தை எதற்கு வேஸ்ட் செய்ய வேண்டும்?” என்றாளாம்.
எல்லோரும் அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரிக்க, அருண், “இதையெல்லாம் விட இன்னொரு ஜோக் கேளுங்க.. அவள் இனிமேல் இங்கே வந்து சாப்பிட மாட்டாளாம்.. வழக்கமாக அவள் வெஜிடேரியன் தான்..
இங்கே உள்ள ஐட்டம் எதையும் தொட மாட்டாள்.. அதனால், இங்கே வந்து சாப்பிடுவதற்குப் பதில் நான் ரூமுக்குப் போகும்போது வெறும் பிரெட், ஜாம் மட்டும் எடுத்து வரவாம்.. அதனால் மெஸ் பில் குறையுமாம்..” என்றான்.
“மெஸ் பில்லா..”
“ஆமாம்.. நேற்று நான் ரூமிற்குப் போனவுடன். ‘என்ன, இங்கே சார்ஜ் எல்லாமே அதிகமா இருக்கே.. வேற எதுக்கெல்லாம் சார்ஜ்’ என்று கேட்டாள். நானும் ‘இங்கே வேலை பார்க்கிற எல்லோருக்கும் சாப்பாடு இலவசம்.. ஆனால் மனைவி இருந்தால் அவள் சாப்பாட்டிற்கு சார்ஜ் உண்டு’ என்று பொய் சொன்னேன்..
வரபோகிற பில்லை நினைத்து இப்போதே சிக்கனமாக இருக்க ஆரம்பித்து விட்டாள்.. அடுத்த முறை அவள் என்னுடன் கப்பலுக்கு வரப்போவது இல்லையாம்..” என்ற அருண் சொல்லி முடிக்கவும் எல்லோரும் புரையேறும்படி மறுபடியும் சிரித்தோம்.
கப்பல் வாழ்க்கை பற்றி ஓரளவு தெரிந்த நானே ஏமாந்தபோது அவள் ஏமாந்ததில் ஆச்சர்யமில்லை. இது சரிப்பட்டு வராது என்று அன்று மாலையே அவளிடம் உண்மையைச் சொல்லச் சொல்லிவிட்டனர்.
அன்று மாலை சாப்பிட வரும்போது ரோஹிணி, தான் ஏமாற்றப் பட்டதை நினைத்து கோபத்தில் எங்கள் யாருடனும் பேசவேயில்லை.. கடைசியில் அவளை சமாதானப் படுத்தி சிரிக்க வைத்தோம்.
கப்பல் சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.. இன்னும் கடல் கொஞ்சம் சீற்றமாகவே இருந்தது.. ஒருவழியாக சமாளித்து கப்பல் இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்தது..
ஒருவாரம் கழித்து, அன்று இரவு கப்பல் நிலநடுக்கோட்டை (Equator line) கடக்க இருந்தது.. புதிதாக கப்பலில் சேர்பவர்களுக்கு அதுவும் ஒரு வித்தியாசமான அனுபவம்..
அட்லாண்டிக் கடலிலேயே எங்கள் கப்பல் ஒருமுறை பூமத்தியரேகையைக் கடந்திருந்தது.. ஆனால் அன்று ஒரு ரிப்பேர் வேலை காரணமாக எல்லோரும் வேலை மும்முரத்தில் அன்று அதைக் கண்டுகொள்ளவில்லை.
எந்த கப்பலிலும் முதல் முதலில் யாராவது பூமத்திய ரேகையைக் கடப்பவர்கள் இருந்தால் அதை பெரிய விழாவாகக் கொண்டாடுவார்களாம். குறிப்பாக பிரிட்டிஷ் நாட்டவர்களும், பிலிப்பினோக்களும் இருக்கும் கப்பல்களில்..
(இந்தியக் கப்பல்களில் பெரும்பாலும் இந்த விழாவை அவ்வளவு சிறப்பாக கொண்டாடுவதில்லை என்று என் நண்பர்கள் பலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்..)
நான் அப்போது முதல்தடவை கடப்பதால் அன்று கொண்டாடியிருக்க வேண்டும்.. ஆனால் இந்தியப் பெருங்கடலில் அடுத்தமுறை கடக்கும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்.
மேலும் அருணின் மனைவியும் வந்து சேர்ந்து விடுவாள் என்பதால் விழாவை இருவருக்கும் சேர்த்து நடத்திக் கொள்ள முடிவு செய்திருந்தனர்.
ஆனால் முதல்தடவை அட்லாண்டிக்கில் அந்தக் கோட்டை கடக்குமுன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை கட்டாயம் என்னால் மறக்க முடியாது.. அன்று என்னை முட்டாளாக்கி ஏமாற்றவும் செய்தார்கள்..
(தொடரும்)