கற்றது கடலளவு-13

அத்தியாயம்-13

ப்பலில் இரும்புத்தாது ஏற்றும் பணி நடந்து கொண்டு இருந்தது.. அநேகமாக விடிவதற்குள் முடிந்து விடும் என்று சொன்னார்கள்.. இந்தத் துறைமுகத்தில் இருந்து கப்பல் கண்டிப்பாக நாளை புறப்பட்டுவிடும்..

அன்று மாலை கப்பலை விட்டு மீண்டும் ‘காஸப்ளாங்கா’ பாரை நோக்கி புறப்பட்டேன்.

என்னுடன் வந்தவர்கள், “என்ன, எல்லோரையும் முந்திக் கொண்டு புறப்படுகிறாய்.. பிரேஸில் பெண்களுக்கு மயங்கி விட்டாயா?” என்றனர்.

“என்னிடம் மட்டும் சொல்.. நான் வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன்.. எதற்காக அந்தப் பெண்ணின் வீட்டுக்கே போனாய்.. பாரில் என்றால் எல்லோருக்கும் தெரிந்து விடும் என்று பயமா?”- என்று கேட்டான் ஜோ..

நான் சிரித்தேன்..”நீயும் கூட அப்படித்தான் நினைக்கிறாயா.. நான் யாருக்கும் பயந்து எதுவும் செய்ய வேண்டியதில்லையே..” என்றேன்.

“சும்மா உன்னை சீண்டிப் பார்த்தேன்..” என்று என் தோளில் கைவைத்து அழுத்தினான்.

டாக்ஸி பாருக்குப் போய்ச் சேர்ந்தது. பட்ரீஷியா வித்தியாசமான உடையில் இருந்தாள். நேற்று அவள் இந்த பாரில் உள்ள பெண்கள் எல்லோரையும் போல், ஆண்களைக் கவர்ந்திழுக்கும் உடையில் இருந்தாள்.. இன்றோ மிக நாகரீகமாக உடையணிந்திருந்தாள்..

எங்களின் டாக்ஸி பாருக்குப் போய்ச் சேர்ந்ததுமே அவள் ஓடிவந்து என் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“இங்கே தங்க வேண்டாம்.. வீட்டுக்குப் போய்விடலாம் இல்லையா..” என்றாள்.

மீண்டும் வீட்டுக்கே போனோம். ரோஸானாவும் மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.நிறைய உணவு வகைகளை தயார் செய்திருந்தனர்.. நீண்ட நேரம் மூவரும் பேசிக் கொண்டிருந்தோம்.

அதன்பின், “ரோஸி ஏதோ உன்னிடம் பேச வேண்டுமென்றாள்.. நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்.. நான் அடுத்த வீடு வரை போய் வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு, பட்ரீஷியா வெளியே போய்விட்டாள்.

என்ன சொல்லப் போகிறாள் ரோஸானா?.. ரோஸி அறைக்குள் சென்று திரும்பி வந்தாள்..

அவள் கையில் ஒரு புகைப்படம்.. அதில் ரோஸியுடன் இருபது வயது வாலிபன்.. நீண்ட தலைமுடி கழுத்து வரை இரண்டு பக்கமும் சுருண்டு தொங்கிக் கொண்டிருந்தது.. மிகவும் அழகாக இருந்தான்.

“யார் இது.. உன் பாய் ஃபிரெண்டா?”

அவள் வெட்கத்துடன் “ஆம் ” என்று தலையசைத்தாள்.

ரோஸிக்கு மிகவும் பொருத்தமானவன் என்று தோன்றியது..

அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, பின் தயக்கத்துடன், “இது ராபர்ட்.. பக்கத்து டவுனில் இருக்கிறான்.. நல்ல ஃபுட்பால் ப்ளேயர்.. நான் அவனை திருமணம் செய்ய வேண்டுமென்று என்னை வற்புறுத்துகிறான்..

ஆனால் எனக்கு டாக்டராகி எல்லோருக்கும் சேவை செய்ய ஆசை.. அதன் பின்தான் திருமணம் செய்யலாம் என்று எண்ணம்.. அவனோ இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்கிறான்”- என்றாள்.

“உன் மம்மியிடம் சொன்னாயா?..”

“எனது பாய் ஃபிரெண்ட் என்று மட்டும் தெரியும்.. திருமணம் பற்றியெல்லாம் சொல்லவில்லை..”

“நீ என்ன முடிவு செய்துள்ளாய்..?”

“அதுதான் எனக்கும் புரியவில்லை..”

“உனக்கு அவனைப் பிடித்துள்ளதல்லவா..?”

“ஆமாம்.. ஆனால் கண்மூடித்தனமான காதல் அல்ல.. அவனைப் பிடித்திருக்கிறது. வாழ்க்கை துணையாக வந்தால் நல்லது.. அதற்காக எனது லட்சியங்களை, அம்மாவின் ஆசையை விட்டுவிட முடியுமா.. நான் நிஜமாகவே இந்த விஷயத்தில் குழப்பத்துடன் உள்ளேன்”

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

“உன் தோழிகளோடு பேசிப் பார்த்தாயா.. ஏன், உன் அம்மாவிடமே இதைச் சொல்லி தீர்வு கேட்கலாமே”

“அம்மாவிடம் இப்போது சொல்லி அவளையும் குழப்ப வேண்டாம் என்று அது பற்றிச் சொல்லவில்லை.. நீங்கள் என் நிலையில் இருந்தால் என்ன செய்வீர்கள்?”

திடீரென்று என்பக்கம் கேள்வியைத் திருப்பி விட்டாள்.. நான் இந்தச் சிக்கலை எதிர்பார்க்கவில்லை..

“சரி.. நான் நேற்று தான் உன்னைச் சந்தித்தேன்.. என்னிடம் ஏன் இதைக் கேட்கிறாய்..”

“எனக்கு நண்பர்கள் என்று யாருமில்லை.. அம்மாவே உங்களையும் மதித்து அழைத்து வந்திருக்கிறாள்.. அவளை போலவே உங்களையும் மதிக்கிறேன்.. அதனால் தான்”

சிறிது யோசித்தேன்.. என்னையும் ஒரு ஆளாக மதித்து கேட்கிறாள்.. சந்தோஷமாக இருந்தது. எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒருவழிதான் தோன்றியது.. நான் நினைத்ததைச் சொன்னேன்.

“நீ கேட்டதால் சொல்கிறேன்.. நான் உன் நிலையிலிருந்தால், ராபர்ட் சொல்வதை ஏற்றுக் கொள்வேன்.. மூன்று வருடத்திற்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள்.. அதன்பின் டாக்டர் படிப்பையும் நீ விட்டுவிடத் தேவையில்லை..

உன் லட்சியமும் நிறைவேறும்.. நீ விரும்பிய வாழ்க்கைத் துணையும் கிடைக்கும்.. உன் லட்சியத்துக்குத் திருமணம் கண்டிப்பாகத் தடையாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்.. திருமணம் செய்த பின்னும் படிக்கலாம் அல்லவா?”

அது அவளுக்கு நல்லது என்று நினைத்தேன்.. அவளது அம்மாவைப் போல வேறு வழியில் வாழ்க்கை திசைமாற இங்கே வாய்ப்புகள் அதிகம். அது நடந்து விடக்கூடாது.. அவளுக்கும் ராபர்ட்டைப் பிடித்திருப்பதால் அவனையும் இழக்க வேண்டியதில்லை.. அவனுடைய சம்மதத்துடனேயே டாக்டருக்குப் படிக்கலாம் என்பதையும் எடுத்துச் சொன்னேன்.

அவளுக்கு அந்த யோசனை பிடித்திருக்க வேண்டும்.. முகத்தில் சந்தோஷம் தெரிந்தது..

“அப்படியே செய்ய முயற்சிக்கிறேன்..” என்றாள்..

பட்ரீஷியாவும் அதன்பின் வந்துவிட்டாள்.

ரோஸி என்னிடம் நிறைய பேசினாள். அவளின் கலகலப்பான பேச்சும், சிரிப்பும் எனக்கு அவள் மீது இன்னும் அதிக அன்பை ஏற்படுத்தின.. அந்த சில மணி நேரத்திலேயே அவளின் அறிவுக்கூர்மையும், மன முதிர்ச்சியும் என்னை ஆச்சர்யப்பட வைத்திருந்தன..

கண்டிப்பாக இந்தியா வந்து அவளின் அப்பாவை ஒருமுறையாவது சந்தித்து விடவேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அவளின் கண்களில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருப்பதை மட்டும் உணர முடிந்தது.

பிரியும்போது, கண்டிப்பாக அடுத்தமுறை கப்பல் வந்தால் வீட்டுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாள். எனக்கும், வாழ்க்கையில் இன்னொரு தேசத்தில் ஒரு நல்ல நட்பு கிடைத்த சந்தோஷம் நிறையவே இருந்தது..

ரோஸியிடம் விடைபெற்றுக் கொண்டு பாரை நோக்கி நடந்தோம் நானும் பட்ரீஷியாவும்..

ஆனால் பட்ரீஷியாவின் வாழ்க்கை மட்டும் ஏனோ உறுத்தலாக இருந்தது. அப்படி நினைக்கக் கூடாது என்று தோன்றினாலும், அது மனதுக்குள் தோன்றுவதை தடுக்க முடியாமல் தவித்தேன்.

வீட்டிலிருந்து திரும்பும்போது பட்ரீஷியாவிடம் கேட்டேன்.. மறுபடியும் அதே கேள்வி.. நேற்றே கேட்டது தான்..

“ஏன் பட்ரீஷியா.. நீ இவ்வளவு நல்ல மனம் படைத்தவளாக இருக்கிறாய்.. ஏன் இந்தத் தொழிலை விட்டுவிடக் கூடாது” என்றேன்.

“அதைவிடு.. நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். நேற்று பாரில் உன்னை முதலில் பார்த்தபோது ஏதோ விரக்தியடைந்தது போல் இருந்தாயே.. ஏன்?” – அவள் என்னைத் திருப்பிக் கேட்டாள்.

“எனக்கு கப்பல் வாழ்க்கை பிடிக்கவில்லை.. ஏனோ தெரியாமல் இந்தத் தொழிலைத் தேர்வு செய்துவிட்டேனோ என்று தினமும் கவலைப் பட்டுக் கொண்டேயிருக்கிறேன்”

“அப்படியானால் கப்பல் வாழக்கையை விட்டு விடப்போகிறாயா?”

நீண்ட பெருமூச்சு என்னிடமிருந்து வெளிப்பட்டது.

“இல்லை.. இன்னும் கொஞ்ச நாட்களாவது இதில் இருந்துதான் ஆகவேண்டும்..”

“ஏன்.. வீட்டை விட்டு, நல்ல நண்பர்களை விட்டு, கண்காணாத தூரத்தில் வாழும் இந்த வாழ்க்கையில் ஏன் இருக்க விரும்புகிறாய்.. உங்கள் ஊரில் உனது தகுதிக்கு வேலை கிடைக்காதா?”

“கண்டிப்பா கிடைக்கும்..நான் படித்த மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் டிகிரிக்கு எப்படியாவது ஒரு வேலை கிடைக்கும்.. ஆனால் ஏற்கனவே இந்த வேலைக்கான ‘டிரெயினிங்’கில் ஒரு வருடம் போய்விட்டது.. இனிமேல் புதிதாக வேலை தேட வேண்டும்.. அதைவிட முக்கியமான விஷயம், இந்த வேலையில் நிறைய பணம் கிடைக்கிறது..

இந்தியாவில், என்னுடைய இஞ்ஜினீயரிங் டிகிரிக்கு கிடைக்கும் சம்பளத்தை விட எத்தைனையோ மடங்கு இதில் கிடைக்கிறது. பதவி உயர்வு வரும்போது இன்னும் அதிகமாகும்.. அதனால் இன்னும் சிலவருடம் இதில் இருந்துவிட்டு, பணம் சேர்த்துக் கொண்டு பின் விலகி விடுவேன்.. நானே புதிதாக ஒரு தொழில் ஆரம்பிப்பேன்..”

அவள் திரும்பி என்னைப் பார்த்து சிரித்தாள்.

“நீ இப்போது ஒப்புக் கொள்கிறாய் இல்லையா…”

“எதை..?”

“நீதானே சொன்னாய்.. இந்த வேலையை பிடிக்கவில்லையென்று.. ஆனாலும் விடாமல் அதில் தானே இருக்கிறாய்.. மனதுக்குப் பிடிக்காத வேலையை பணத்துக்காக செய்கிறாய்.. என்னைக் கேட்டால் நீயும் என்னைப் போல்தான்.

உனக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.. நான் உடலை விற்கிறேன்.. நீ மனதை விற்கிறாய்.. அதுதான் வித்தியாசம்..பிடிக்கவில்லையென்றால் விட்டுவிட்டு ஓடாமல், பணம் கிடைக்கிறது என்பதற்காகத் தானே இருக்கிறாய்.அதுபோலத் தான் நானும்..

ஒருவிதத்தில் இரண்டு பேரும் ஒரே வாழ்க்கை தான் நடத்துகிறோம்.. உன்னுடைய கடல்
பாஷையில் சொல்லப் போனால், ‘வி போத் ஆர் ஸெய்லிங் இன் த ஸேம் போட்’(We both are sailing in the same boat).. இல்லையா”

‘சுளீர்’ என்று சவுக்கால் அடித்த உணர்வு.. எவ்வளவு பெரிய வார்த்தைகள்..

‘பணத்துக்காக மானத்தை மட்டுமல்ல.. மனதை விற்பதும் விபசாரம் தான்..’

மிகத் தெளிவாகச் சொல்லி அவள் அதை புரியவைத்து விட்டாள். எனக்கு பதில் சொல்ல முடியவில்லை..

அவள் கேட்ட கேள்வி அன்று மட்டுமில்லாமல் அதன்பின் தொடர்ந்த நாட்களிலும் என்னைத் துளைத்துக் கொண்டேயிருந்தது.. அதன்பின் எதுவும் பேசாமல் நடந்து கொண்டிருந்தேன்.

“என்ன பேசாமல இருக்கிறாய்.. நான் கேட்டதில் கோபமா?”

“இல்லையில்லை.. நீ கேட்டபின் தான் எனக்கே அது புரிகிறது.. நீ கேட்டதில் தவறில்லை..” -புன்னகையில் என் தோல்வியை மறைக்க முயன்றேன்.

“உன்னை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன்.. இனியொருமுறை நாம் சந்திப்போமா என்று தெரியவில்லை.. நட்ராஜைக் கண்டுபிடித்தால் நான் கேட்டதாகச் சொல்..” என்றாள்.

பத்ரீஷியா அதன்பின் மிகவும் சோகமாகவே இருந்தாள்.

கடைசியாக நான் அந்த இடத்தை விட்டுப் புறப்படும் போது என் இரு கன்னத்திலும் நட்புடன் முத்தமிட்டாள்..

டாக்ஸி தூரத்தில் திரும்பும்வரை அவள் கையசைத்துக் கொண்டே நின்றிருந்தது எனக்குத் தெரிந்தது.. எனக்குள்ளும் மிகவும் சோகமாக உணர்ந்தேன்.. ஏனோ கண்களில் நீர் திரையிட்டது.. ஜோ என்னை வித்தியாசமாகப் பார்ப்பதை உணர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

அதன்பின் எத்தனையோ நாடுகளையும், மக்களையும் சந்தித்து விட்டாலும், என் மனதில் ‘மடீரா’ துறைமுகத்தின் நினைவுகள் மட்டும் மறக்காமலேயே இருந்தன..

‘மனதை விற்று நீ வாழும் வாழ்க்கையும் ஒரு வகையில் விபசாரம் தான்’ என்ற பட்ரீஷியாவின் வார்த்தைகள் மட்டும் மனதைத் தொடர்ந்து துளைத்துக் கொண்டு இருந்தது..

ஆனாலும் இந்த உப்பு நீருக்குத் தான் எத்தனை சக்தி.. மனதைத் தொலைத்து விட்டு, வெட்கமில்லாமல் நானும் அதே கடலை விடாமல் தேடிப் போய்க் கொண்டேயிருந்தேன்.

பட்ரீஷியாவும் ரோஸானாவும் அவ்வப்போது என் நினைவில் வந்து போய்க் கொண்டு இருந்தனர். ஆனால் நான்கு ஆண்டுக்ளுக்குப் பின், மீண்டும் அந்த மடீரா துறைமுகத்துக்குப் போனபோது, எனக்கு ஒரு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது..

ரோஸானாவுக்கு அப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.. அந்த சந்திப்பு பற்றி பின்பு இன்னொரு நாள் சொல்கிறேன்..

(தொடரும்- )

Post a Comment