திமிர் பிடித்த கடல்கணேசன்

எனது ‘கற்றது கடலளவு’ தொடரைப் படிப்பவர்களில் சிலர் கடல்கணேசன்-ஒரு அப்பாவி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்..

என்னோட ரேஞ்சு ‘அப்பாவி’ இல்லை ‘அ(ட)ப்பாவி’ன்னு யாருக்கும் தெரியாது இல்லையா.. அதைப் புரிய வைக்க இன்றைய ‘திமிர்’ பதிவு..

இன்னிக்கு வித்தியாசமாக இருக்கட்டும் என்று, என்னோட ‘திமிர்’ அனுபவங்கள் இங்கே..

————————–

சென்னையின் புறநகர்ப் பகுதியான போரூரில், ஒருமுறை எனக்கும், காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் இடையில் நடந்த ஒரு ‘சண்டை’க்காட்சி இன்றைய பதிவாக..

இது கப்பல் வேலையில் சேரும் முன், நான் நிருபராக இருந்தபோது நடந்த சம்பவம். அப்போது போரூரில் நண்பர்களுடன் ரூமில் தங்கியிருந்தேன்..

ஒரு நாள் இரவு. ஒன்பதரை மணி இருக்கும்.. மறு நாள் விடிந்தால் தேர்தல்.. அது சட்டமன்றத்துக்கோ நாடாளுமன்றத்துக்கோ.. இப்போது நினைவில்லை..

ரூமில் இருந்து ஹோட்டலுக்கு சாப்பிடப் போய் விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். போரூர் ரவுண்டானா தாண்டி குன்றத்தூர் செல்லும் சாலை..

திடீரென அந்த இடத்தில் பரபரப்பு.

இரண்டு கட்சிக்காரர்களிடையே சண்டை.. நான் என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தேன்..

அப்போது ஒரு ஆட்டோ வந்தது.. அதிலிருந்து இறங்கிய இரண்டு பேர், கும்பலை நோக்கி வேகமாகப் போக நானும் சுவாரஸ்யமானேன்..

அந்த வார ஜூ.விக்கு ஏதாவது மேட்டர் சிக்காதா என்ற ஆர்வத்தோடு நடப்பதைக் கவனிக்க ஆரம்பித்தேன்..

கூட இருந்த நண்பர்கள், “ஏதோ பெரிய சண்டை வரப்போகுது.. வாடா போகலாம் ” என்று என்னை இழுக்க ‘திமிர்’கணேசன் சும்மா போவானா?.

“டேய், இருங்கடா.. எழுத ஏதாவது மேட்டர் கிடைக்குதான்னு பார்ப்போம்” என்று சொல்லி விட்டு கவனிக்க ஆரம்பிக்க, ஆட்டோவிலிருந்து ஒரு தலை வெளியே எட்டிப் பார்த்தது.

அந்தத் தலை என்னைப் பார்த்து, “ஏய்” என்றது..

அந்த வயதில் யாருக்கும் நாம் அடி பணிந்ததில்லை.. இருபத்தொரு வயது இளரத்தம்.. நம்மைப் பார்த்து யாரோ ஒருவர் ஏகவசனத்தில் அழைப்பதா?..

அவருக்கு சற்றும் குறையாத குரலில், “என்னாஆஆஆஆஆஆ” என்று இழுத்தேன்..

அவ்வளவுதான்.. அடுத்த வினாடி, ஆட்டோவிலிருந்து குதித்து இறங்கிய அந்த உருவம் அதே வேகத்தில் என்னை நெருங்கியது..

அப்போது தான் கவனித்தேன்.. ‘மலையூர் மம்பட்டியான்’ மாதிரி உடம்பை ஒரு போர்வையால் போர்த்தியிருந்தது அந்த உருவம்..

என்னை நெருங்கிக் கொண்டே தோளைச் சுற்றிப் போர்த்தியிருந்த போர்வையை ஆட்டோவுக்குள் எறிந்தது…

‘ஆ..போலீஸ்’. அப்போது தான் கவனித்தேன்..

அவர் ஒரு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்.. தோளில் இருந்த நட்சத்திரங்களை வைத்துக் கண்டுபிடித்தேன். என்னை நெருங்கிய வேகத்தில் என் சட்டையைக் காலரோடு இறுக்கிப் பிடித்தார்..

நான் யோசிப்பதற்குள் அவர் என்னை நெருங்கி, இடது கையால் என் காலர் பிடித்து கழுத்துடன் இறுக்கி, அதே வேகத்தில் வலது கையை மேலே உயர்த்தினார். வினாடிக்குள் எல்லாம் நடந்தது..

அடுத்து அவரின் கை என் கன்னத்தைப் பதம் பார்க்கும் என்று மூளைக்குள் ஏதோ ‘பளிச்’சென உணர்த்த, வேகமாக அவர் கையை என் கையால் தடுத்தேன்.

ஒரு வினாடி அவர் அதிர்ந்ததைப் பார்க்க முடிந்தது. ஒருவேளை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அடிக்கும்போது யாரும் எதிர்த்து, கைப்பிடித்து தடுப்பதை அவர் பார்த்திருக்க மாட்டாரோ என்னவோ..

ஆனால் அடிக்க வந்த அவர் கையை, சற்று பலமாகவே தடுத்து இருந்தேன் நான்.

அவர் கையைத் தடுத்து, அதே நேரத்தில் தலையைக் குனிந்து, அவரது சட்டை மார்புப் பகுதியில் மேலே குத்தியிருந்த ப்ளாஸ்டிக் பட்டையை உற்றுப் பார்த்தேன்..

என் செயல் அவருக்கு மேலும் ஆச்சர்யமாக இருந்திருக்க வேண்டும்..

“டேய்.. என்னடா பார்க்கற” என்றார் கோபத்துடன்..

“முதலில் மரியாதையா கூப்பிடப் பழகுங்க சார்”- நான்.

மறுபடியும் அதிர்ந்ததை பார்க்க முடிந்தது..

“யார் நீங்க.. என்ன பார்த்தீங்க குனிஞ்சு..”- (ஆங்..மரியாதை..அது!..இது நல்ல புள்ளைக்கு அடையாளம்..)

“இல்லை.. உங்க பேரு என்னன்னு பார்த்தேன்..”

அடுத்த வினாடி, அவர் கை வேகமாக கீழே விழுந்தது.. நான் பெயரை மனதில் பதித்தேன்.

ஒரு வினாடி என்ன செய்வதென்று யோசித்தார்..

‘என்னது.. மினிஸ்டரோட ‘கீப்’பு வீட்டு வேலைக்காரன் மாதிரி திமிரா இருக்கான்’னு ஒருவேளை நினைச்சிருக்கலாம்..

“யார் நீங்க?.. இந்நேரத்தில் இங்க என்ன பண்றீங்க.. கூப்பிட்டா பதில் சொல்ல வேண்டியது தானே..”- அவர்.

“நான் தான் பதில் சொன்னேனே.. அது சரி, நீங்க எதுக்கு மரியாதை இல்லாம பேசினீங்க.. எதுக்கு சட்டையைப் பிடிசீங்க?.. அதைச் சொல்லுங்க முதலில்” என்றேன் நான்.

இதற்குள், அங்கே சண்டைபோடத் தயாராக இருந்த கும்பல் எங்களை நோக்கி வந்தது.. ஏற்கனவே ஆட்டோவிலிருந்து இறங்கிய இரண்டு பேரும், சாதாரண உடையிலிருந்த போலீஸ்காரர்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது..

எஸ். ஐ. மறுபடியும் என்னைப் பார்த்து, “சரி.. அதை விடுங்க சார்..(அடடா..மரியாதை கூடியிருச்சே..) யார் நீங்க?.. எங்க வேலை பார்க்கறீங்க?” என்று கேட்டார்.

நான் பத்திரிக்கை நிருபர் என்பதைச் சொல்லி, சாப்பிட்டு விட்டு ரூமுக்குப் போக இருக்கும்போது, சம்பவத்தைப் பார்க்க நின்றதைச் சொன்னேன்..

அதற்குள் “சரிசரி.. போங்க சார்.. நீங்க வீட்டுக்குப் போங்க” என்று ‘மப்டி’யில் இருந்த போலீஸார் சமாதானமாகச் சொல்லவும் நான் அந்த இடத்திலிருந்து நகர ஆரம்பித்தேன்.

அந்த எஸ்.ஐ. என்ன நினைத்தாரோ.. பார்த்துக் கொண்டே இருந்தார்.. நான் அவரைக் கண்டுகொள்ளாமல் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. குன்றத்தூர் செல்லும் சாலையில் ஆர்.இ.நகரில் நான் தங்கியிருந்த ரூம் இருந்தது..

நாங்கள் நடக்க ஆரம்பித்து இரண்டு நிமிடம் கழிந்திருக்கும்.. ரோட்டில் ஒரு இருளான இடத்தைக் கடக்கையில், வேகமாக வந்த ஆட்டோ ஒன்று உரசியபடி அருகே வந்து நின்றது… அவர்கள் தான்.

இறங்கிய வேகத்தில், “நில்லுங்க.. மூணு பேரும் அட்ரஸ் சொல்லுங்க” என்றார் ஒரு கான்ஸ்டபிள்.

நான் நண்பர்களை நோக்கி கை அமர்த்தி, “எதுக்கு உங்களுக்கு எங்க அட்ரஸ் வேணும்?” என்றேன்..

“இல்லை, சொல்லுங்க..” என்றார் இன்னொரு கான்ஸ்டபிள்.

நான் வேண்டுமென்றே விகடன் அலுவலகத்தின் அண்ணாசாலை முகவரியைச் சொன்னேன்..

“இல்லை.. நீங்கள் தங்கியிருக்கும் அட்ரஸ் சொல்லுங்க..” என்றார்.

பின் நண்பர்கள் பக்கம் திரும்பி, “நீங்க சொல்லுங்க” என்றார்.

நான் “அவங்க ரெண்டு பேரும், என்னைப் பார்க்க வந்த நண்பர்கள்.. ” என்றேன்.

“அப்படியா.. அப்போ ஊர், அட்ரஸ் எல்லாம் சொல்லுங்க” என்றார்..

அவர்கள் என்னை பரிதாபமாகப் பார்க்க, நான் அந்த போலீஸ்காரரைப் பார்த்து “நீங்கள் யார் இதெல்லாம் கேட்க” என்றேன்.

“நான் கான்ஸ்டபிள்” என்றார் ஒருவர்..

“உங்க பேரென்ன.. எந்த ஸ்டேசன் நீங்க..”

உள்ளுக்குள் என்ன செய்வார்களோ என்ற பயம் கொஞ்சம் இருந்தாலும், என்னதான் நடக்கும் என்று பார்த்து விடலாம் என்ற ‘திமிரும்’ கூடவே வந்து தைரியம் கொடுத்தது..

நான் அப்படி கேட்பேன் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை..

“நீங்க எதுக்கு அதெல்லாம் கேட்கறீங்க..”- அவர் என்னைத் திருப்பிக் கேட்டார்.

“நீங்க எங்ககிட்டே கேட்கும்போது, நாங்க கேட்கக் கூடாதா.. நீங்க யூனிபார்ம் கூட போடலையே” என்றேன்.

ஒரு வினாடி தயங்கி, அந்த சப் இன்ஸ்பெக்டரைப் பார்க்க (அது வரை எதுவும் பேசாமல் நின்று சும்மா பார்த்துக் கொண்டு இருந்த) அவர் தலையசைத்தார்..

கான்ஸ்டபிள்கள் இருவரும் “வளசரவாக்கம் ஸ்டேசன்..” -என்று சொல்லி, பெயர்களைச் சொன்னார்கள். (அதெல்லாம் அப்போதே மறந்து போய் விட்டது. இப்போது நினைவில் இல்லை).

நண்பர்களைப் பார்த்து “இப்போ பேர், அட்ரஸ் சொல்லுங்கள்” என்றேன்..

அவர்கள் தயக்கத்துடன் சொல்ல, ஒரு போலீஸ்காரர் தன் கையிலிருந்த சின்ன நோட்டில் எழுத ஆரம்பிக்க, நான் என் சட்டைப் பையிலிருந்து பேனா, பாக்கெட் டைரி எடுத்தேன்..(நிருபர் பணியிலிருந்த நேரத்தில் எப்போதும் பையில் இருக்கும்).

அந்த போலீஸார் சொல்லியிருந்த பெயர்களைக் குறித்துக் கொண்டு, “உங்க நம்பர் என்னன்னு சொல்லுங்க சார்” என்றேன் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவரை நோக்கி..

“எதுக்கு”

“நீங்கள் எங்கள் பேர், அட்ரஸ் எல்லாம் கேட்கறீங்க இல்ல..”

அவர் தயக்கத்துடன் கொடுத்தார்..

அது வரை பேசாமல் இருந்த எஸ்.ஐ. வாய் திறந்தார்.

“இப்போ இதெல்லாம் நோட் பண்ணி வச்சு என்ன பண்ணப் போறீங்க.. நாளைக்கு ஜூனியர் விகடன்ல சப்-இன்ஸ்பெக்டர் சட்டையைப் பிடிச்சு இழுத்தார்னு நாலு வரி எழுதுவீங்க.. அவ்வளவு தானே..” என்றார்.

நான் மெதுவாக, “நாலு வரியோ, நாலு பக்கமோ.. நடந்ததை அப்படியே எழுதுவேன்” என்றேன்.

அவர் யோசிப்பது தெரிந்தது..

திடீரென்று “உங்க பேர் என்ன சொன்னீங்க சார்” என்று அன்புடன் என் தோள் மீது கைவைத்தார்.

நான், பெயரைச் சொன்னேன்.

“கணேசன்.. உங்களுக்குத் தெரியாதது இல்லை.. பத்திரிக்கைக்காரர்.. எலக்சன் சமயத்தில் எங்களுக்கு எவ்வளவு டென்ஷன் இருக்கும்.. நான் ஏதோ லோக்கல் ஆளுங்கன்னு நெனச்சு அப்படி நடந்துகிட்டேன்.. நீங்க மனசில வச்சுக்காதீங்க” என்று ‘தடால்’னு வெள்ளைக் கொடி காட்டிவிட்டார்..

நான் அவரின் திடீர் அன்பு மழையில் நனைந்து போனேன்..

“நானும் தப்பா நினைக்கலை சார்.. திடீர்னு ‘என்ன’ன்னு கூட கேட்காம, காலர் பிடிச்சவுடன் கோபம் வந்திடுச்சு..” என்றேன்.

“சரி..சரி.. நீங்க எழுதின கான்ஸ்டபிள் பேரு, நம்பர் எல்லாம் திருப்பிக் கொடுங்க..” என்றார்..

“அப்போ, அவர் எழுதின என் பிரண்ட்ஸ் பேர், அட்ரஸ் உள்ள பேப்பரைக் கொடுக்கச் சொல்லுங்க..”

“அய்யோ.. அது கிழிக்க முடியாது.. கிழிக்கக் கூடாது சார்.. ரிக்கார்டு” – என்று பதறினார் கான்ஸ்டபிள்..

“அப்போ, நானும் இதைத் தர முடியாது”- உங்களுக்கு நான் ஒன்றும் சளைத்தவன் அல்ல என்று வீம்பு செய்தேன்..

சப்- இன்ஸ்பெக்டர் யோசித்து விட்டு, “சரி.. கிழிச்சுக் குடுய்யா.. பார்த்துக்கலாம்” என்று உத்தரவு கொடுத்தார்.

காகிதங்கள் இனிதே கைமாறின.. கைகுலுக்கல்கள்..

“கணேசன்.. ஃப்ரீயா இருக்கும்போது வளசரவாக்கம் ஸ்டேசன் பக்கம் வாங்க.. மனசில ஒண்ணும் வச்சுக்காதீங்க” என்று சப்-இன்ஸ்பெக்டர் மறுபடியும் கைகுலுக்கி விடைபெற…..

-இது உண்மையிலேயே நடந்த ஒரு சம்பவம்..

இப்போது நினைத்தால் ஆச்சர்யமிக்கதாக இருக்கிறது.. நாம் தானா அவ்வளவு தைரியத்துடன் நடந்து கொண்டோம் என்று..

அது ‘பத்திரிக்கையாளன்’ என்று விகடன் தந்த தைரியம்.. 21 வயது.. எதைக் கண்டும் பயப்படாமல் திரிந்த அந்த ‘திமிர்’ பிடித்த கணேசன் இப்போது எங்கே…

தேடிப் பார்த்தும் காணவில்லை.. காலம் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது
————-
பார்த்திபனிடம் நான் காட்டிய திமிர்:

அப்போ எனக்கு 17 வயது.. இஞ்ஜினீயரிங் கல்லூரியில் சேரும் முன் சிலமாதங்கள் மதுரையில் ஒரு கல்லூரியில் B.sc படித்தேன்.

கல்லூரி ஹாஸ்டலில் நடந்த சம்பவம் இது..ஒருநாள் இரவு ஹாஸ்டலில் விடியோவில் சினிமா காட்ட இருந்தார்கள்..

நல்ல கூட்டம்.(அப்போது சன் டிவி எல்லாம் கிடையாது..).படம் ஆரம்பிக்கவில்லை இன்னும்..திடீரென ‘கரெண்ட் கட்’.. கூட்டத்தில் யார் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை..

இருட்டில் திடீரென ‘ஆ’ என்று சத்தம்.

என் அருகில் இருந்து தான் வந்தது.. எனக்குப் புரிந்து போனது- நான் அருகிலிருந்த ஒருவனின் காலை நன்றாக மிதித்து விட்டேன் என்று..

யார் என்று தெரியவில்லை..அடுத்த வினாடி கரண்ட் வந்து விட்டது.. நான் காலை மிதித்த ஆள் யாரென்று பார்த்தேன்..

நல்ல திடக்காத்திரமான உடல்.. நல்ல உயரம்.. முன்பே பார்த்திருக்கிறேன்.. அவன் இரண்டாம் ஆண்டு மாணவன்.. ரொம்ப நல்ல பையன் என்று அவனுக்குப் பெயர்.

அந்த வெளிச்சத்தில் அவன் முறைப்பது தெரிந்தது..

“ஸாரி அண்ணே.. தெரியாம மிதிச்சிட்டேன்..”

அவன் உடனே மனம் இறங்கி விட்டான்.. ஆள் தான் பார்க்க பலசாலியே தவிர மனது ரொம்ப நல்லது.. நல்லா படிக்கக் கூடிய பையன் என்றும் கேள்விப் பட்டிருந்தேன்.. அதனால் சண்டைக்கு வரமாட்டான் என்று நம்பினேன்…(அப்படி ஒரு பார்முலா இருக்கு.. நல்லா படிக்கிற பையன்கள் எல்லாம் பயந்தாங்கொள்ளிகள் தான் 99 சதவீதம்.. இது கடல்கணேசன் ரிசர்ச் பண்ணி கண்டுபிடிச்சது..)

நான் நினைத்தது சரி..

“அதனால் என்ன.. பரவாயில்லை” என்றான் அவன்..

இங்கே தான் நம்ம திமிர்’கணேசன்’ உள்ள வந்தான்.. நாக்கில சனியாக..

“அப்போ இன்னொரு தரம் மிதிச்சுக்கலாமா?”- கேட்டது நான் தான்..

அதுக்கப்பறம்?…வேறென்ன.. அரைமணி நேரம் கழித்து அந்த ‘நல்ல பையன்’ இருபது பேர் கொண்ட கும்பலோடு என் அறைக்கு வந்ததும், என்னை பின்னியெடுக்க அவர்கள் தயாரான சமயத்தில் எங்கள் ஊர்க்கார மூன்றாவது வருட மாணவர் வந்து சமாதானம் செய்து ‘திமிர்’ பிடித்த என்னை மன்னிப்புக் கேட்க வைத்ததும்..

அவ்ளோ தான் ‘திமிர்’கதை.. ‘பார்த்திபன்’ என்பது நான் மிதித்த காலுக்குச் சொந்தக்கார அந்த மாணவனின் பெயர். நடிகர் பார்த்திபன் அல்ல..

இது திமிர் பிடித்த நான் மன்னிப்பு கேட்ட நிகழ்ச்சி..

———————-

வேலை நேரத்தில் தூங்கினால்…

(இது திமிர் அனுபவம் கிடையாது..)

சில நேரங்களில் ஆர்வக் கோளாறு காரணமாக மற்றவரின் மனதைப் புண்படுத்தி விடுவோம்.. அப்படி செய்து விட்டு பின்னால் வருத்தப்பட்ட ஒரு சம்பவம் இது ..

அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் பொறியியல் கல்லூரியில் படித்த சமயம். கடைசி வருடம்.. விகடனின் மாணவ நிருபராகவும் இருந்தேன்..

சிலசமயம் ராத்திரி நேரத்தில் ரவுண்ட்ஸ் போகும் வழக்கமும் உண்டு.. அப்போது நடப்பவற்றை ‘ஆந்தையார்’ என்ற பெயரில் ‘ராத்திரி ரவுண்ட் அப்’பாக எழுதுவதும் ஜூனியர் விகடனில் வழக்கம்.

எனது சீனியர் நிருபர் ஒருவர் அந்தப் பகுதியிலேயே இருந்தார்.. அவருக்கு உதவியாக நானும் ஓர் இரவில் ராஜபாளையத்தில் ‘ராத்திரி ரவுண்ட் அப்’ போக முடிவெடுத்து, இருவரும் நள்ளிரவில் ஊரைச் சுற்றிக் கொண்டு இருந்தோம்..

மணி இரவு இரண்டுக்கு மேல் இருக்கும்..

நண்பர் ஒருவருக்கு திருமண வாழ்த்து தந்தி அடிக்க வேண்டிய ஞாபகம் வந்தது எனது சீனியருக்கு.. போகும் வழியில்தான் தந்தி அலுவலகம் இருந்தது..

‘சரி’ என்று அங்கே போனால் அப்போது அங்கே இரவு நேர பணியில் இருந்த ஊழியர், மேஜை மேல் தலை வைத்து நல்ல தூக்கத்தில் இருந்தார்..

“சார்.. ஒரு டெலிகிராம் கொடுக்கணும்” என்றார் சீனியர்..

தூக்கக் கலக்கத்தில் இருந்த அவர் எங்களை நிமிர்ந்து பார்த்துவிட்டு, மறுபடியும் மேஜை மேல் தலைவைத்துப் படுத்து விட்டார்..

மறுபடியும், “சார். ஒரு…..”

“என்ன ‘டெத்’தா..”

“இல்லை”

“அப்ப எழுதிக் கொடுத்திட்டுப் போங்கய்யா.. வேற நேரம் கிடைக்கல உங்களுக்கு.. இந்த நேரத்தில் வந்து கழுத்த அறுத்துக்கிட்டு..”- முணுமுணுத்து விட்டு, மீண்டும் தன் வேலையைப் பார்க்க (தூக்கம் தான்! வேறென்ன..) ஆரம்பித்தார்.

பாவம் அந்த மனிதர்.. அந்த நேரத்தில் கொட்டக் கொட்ட விழித்து வேறு என்ன சாதித்து விடமுடியும்.. ஒரு நிமிடம் விழித்து நாங்கள் கொடுக்க இருந்த தந்தியை வாங்கி அனுப்பி விட்டிருந்திருப்பார்..

இதையெல்லாம் யோசிக்கும் அளவு, மனமுதிர்ச்சி அப்போது இல்லை..

குறும்பு செய்யும் வயது வேறு.. அரசாங்க ஊழியர் பணியில் இருக்கும்போது தூங்கிக் கொண்டு இருந்ததோடு அல்லாமல், தந்தி கொடுக்க வந்த ஒரு இந்திய குடிமகனை அவமானம் செய்யும் விதமாகவும் பேசியதால், எங்களுக்கு பொறுக்கவில்லை(!?)..

உடனே ஒரு தந்தி படிவம் எடுத்து, எழுதினோம்..

“DONT SLEEP AT DUTY HOURS- by AANDHAI” என்று எழுதி பெறுபவரின் முகவரியில், “டியூட்டியில் உள்ள தந்தி அலுவலக ஊழியர், தந்தி அலுவலகம், ராஜபாளையம்” என்று எழுதினோம்..

“சார்.. இந்தாங்க.. இதை அனுப்புங்க..” என்றோம்.

அவர் எரிச்சலுடன் கண்விழித்து, வேண்டா வெறுப்பாக படிவத்தை வாங்கினார்..

அதே உணர்வுடன் மேட்டரைப் படித்த அவர் அடுத்த வினாடி, பதறிப் போய் எழுந்தார்..

“சார்.. என்ன இது..”

“நீங்க இதை முதலில் சேர வேண்டியவருக்கு அனுப்புங்க..”- சீனியர்..

அவர் தயங்க, ஐந்து நிமிட போராட்டத்துக்குப் பின், சீனியர் அவரை அந்த தந்தியை கடைசியில் அதை அவர் கையாலேயே அனுப்பச் செய்தார்.. விடவேயில்லை.. நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்..

அதன்பின் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டோம்.. பாவம் அந்த மனிதர்.. வாழ்க்கையில் அதற்குப் பின் டியூட்டி நேரத்தில் தூக்கம் வந்திருக்குமா அவருக்கு.. நாங்கள் செய்தது ஒரு வகையில் திமிர் தானா?

பி.கு: அந்த நல்ல மனிதர், மறுநாள் காலையில் மதுரையில் உள்ள தனது உயர் அதிகாரிக்கு தன் தவறைக் குறிப்பிட்டு, தகவல் தந்ததும், அதிகாரி அவரை மன்னித்து விட்டதும், எனது சீனியரின் தொலைபேசி எண் கண்டுபிடித்து , தொலைபேசியில் தகவல் தெரிவித்து, அந்த நிகழ்ச்சி பற்றி பத்திரிக்கையில் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால், சீனியரும் அதை பிரசுரிக்க அனுப்பவில்லை..

அவர் டியூட்டி நேரத்தில் தூங்கியது விதிப்படி தவறாக இருக்கலாம்.. ஆனால் அதற்காக அவருக்கு நாங்கள் கொடுத்த மன உளைச்சல்.. நியாயமானதா…. அந்த இரவு நேரத்தில் பாவம் தூங்கி விட்டுப் போனால் தான் என்ன.. அப்படி ஒன்றும் மன்னிக்க முடியாத குற்றமா என்ன? …இப்போது நினைத்தாலும் மனதுக்கு வருத்தமாகத் தான் உள்ளது..

(‘அவர் செய்தது நியாயமில்லை.. அப்படி வேலை நேரத்தில் தூங்கவா சம்பளம் கொடுக்கிறது அரசாங்கம்’ என்று நம்மில் பலருக்கு ‘அந்நியன்’, ‘இந்தியன்’ உணர்வு தோன்றுவது இயல்பு தான்.. ஆனாலும் ஏனோ அந்த நிகழ்ச்சி மனதில் பாரமாக இன்னும் தங்கி இருந்ததால், இங்கே இறக்கி வைத்தேன்)

———————————-

இ’ம்’-சை இளவரசியுடன் ஒரு சாட்டிங்:

நேற்று ஒரு தோழியுடன் நெட்டில் ‘சாட்’டிங் செய்து கொண்டிருந்தேன்.

அவருடன் உரையாடிக் கொண்டே கம்ப்யூட்டரில் வேறு ஒரு வேலையையும் செய்து கொண்டிருந்தேன்..

அவரிடம் ஒரு விஷயம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க, அவர் விளக்கிக் கொண்டு இருந்தார்.

இடையில் அவர் ஏதோ கேட்க, நான் வேறொரு ஞாபகத்தில் “ம்.. சொல்லுங்கள்” என்றேன்.

அவர் உடனே “ம்.. சொல்லிவிட்டேன்” என்றார்.

நான் வேலையில் கவனமாக இருந்ததால், அவர் சொன்னதை கவனிக்காமல் இருந்து விட்டேனோ என்ற சந்தேகத்தில் “எப்போது சொன்னீர்கள்.. நான் கவனிக்கவில்லையே” என்றேன்.

“இப்போது தான் சொன்னேன்.. நீங்கள் ‘ம்’ என்று தானே சொல்லச் சொன்னீர்கள்.. நானும் ‘ம்’ என்று சொல்லிவிட்டேனே” என்று எனக்கே சுஜாதாவின் ‘சம்திங்’கை திருப்பிக் கொடுத்தார்..

(புரியாதவர்கள் போன புதன் அன்று நான் எழுதிய ‘சுஜாதா கொடுத்த சம்திங்’ பதிவைப் படிக்கலாம்.)