கற்றது கடலளவு-12

அத்தியாயம்- 12

ரோஸானாவிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு திரும்பவும் பார் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நானும் பட்ரீஷியாவும் மட்டுமே அந்த நீண்ட இருளடைந்த வீதியில்.

தூரத்தில் ‘காஸப்பிளாங்கா’ பாரின் நியான் எழுத்துக்கள் தெரிந்தது.. மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் அழுத்திக் கொண்டேயிருந்தது. கேட்டுவிட்டேன்.

“பட்ரீஷியா.. நீ வாழும் வாழ்க்கை தப்பென்று உனக்கு தோன்றவில்லையா..”

சிறிது நேரம் மௌனமாக நடந்து வந்தாள். பின்பு எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள்.

“சரி, தப்பெல்லாம் அவரவர் மனதைப் பொறுத்தது.. உனக்கு சரியென்று படும் விஷயம் எனக்கு தவறாகப் படலாம்.”

“ஆனால் நாம் பேசிக்கொண்டிருக்கும் விஷயம் உலகம் முழுதும் ஒரே மாதிரியாகத்தானே பார்க்கப் படுகிறது.”

“இருக்கலாம்.. என்னைப் பொறுத்தவரையில் அடுத்தவரை பாதிக்காத எதுவும் தவறில்லை. இது ஒரு விதத்தில் வியாபாரம். எனக்கு பணம் தேவைப்படுகிறது. அவர்களுக்கு என் உடம்பு. இதில் நான் செய்வது மட்டும் எப்படி தவறாகும்?..

இங்கே வந்து போகும் ஆண்களில் எத்தனை பேர் மனைவியிடம் இது பற்றி ஒப்புக் கொள்வார்கள்?. அவர்கள் மனைவி மட்டும் இவர்களுக்காக வாழ்நாள் முழுதும் காத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கு போகும் இடங்களில் கிடைத்த பெண்கள் எல்லாம் சொந்தம்.

அவர்களின் வாழ்க்கை உனக்கு ஏன் தப்பாகத் தெரியவில்லை.. அவர்கள் பணம் கொடுக்கிறார்கள் என்றால் நான் உடல் கொடுக்கிறேன்.. இதில் யார் உயர்ந்தவர்கள் என்பதை நீ எப்படி தீர்மானிக்கிறாய்.?”

அவள் குரலில் சிறிது கூட கோபம் இல்லை.. ஆனால் வார்த்தைகளில் அழுத்தம் இருந்தது.

நான் இடைமறித்தேன். “நான் அவர்களைப் பற்றி பேசவில்லை.. அவர்கள் செய்தது சரி என்று சொன்னேனா.. நீ செய்வது சரியா என்பது மட்டுமே என் கேள்வி.”

சிறிது நேரம் மீண்டும் மௌனமாக இருந்தாள். ஏதோ தீவிரமாக சிந்திப்பது போல் இருந்தது.. பின் மெதுவாகச் சொன்னாள்.

“நீ கேட்பது சரிதான்.. நிஜத்தைச் சொன்னால் எனக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது.. என் மனதுக்கும் இந்தத் தொழில் பிடிக்கவில்லை தான். ஆனால் பிரேஸிலில் என்னுடைய தகுதிக்குக் கிடைக்கும் வேலையில் மாத சம்பளம் வாங்கி என்னால் வாழ்க்கை நடத்த முடியும் என்று தோன்றவில்லை.. ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்காது..

எல்லாவற்றிற்கும் மேல் நான் ரோஸி மேல் உயிரை வைத்திருக்கிறேன்.. அவளுடைய எதிர்கால வாழ்க்கை எனக்கு முக்கியம்.. அதற்கு நிறைய பணம் தேவை.”

“அவளை டாக்டராக்க வேண்டும்.. அதுதானே”

அவள் என் முகத்தைப் பார்த்தாள்.

“ரோஸி உன்னிடம் சொன்னாளா..”

‘ஆம்’ என்று தலையசைத்தேன்.

நீண்ட சோக பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது.. அதற்குள் பார் வந்துவிட்டது.

ஜோ என்னைக் காணாமல் குழம்பிப் போய் நின்று, நாங்கள் வருவதைப் பார்த்து நிம்மதியானான். நான் பத்ரீஷியாவோடு வருவதை ஆச்சர்யமாகப் பார்த்தான் அவன்.

பாரைவிட்டு டாக்ஸியில் புறப்பட்ட போது, “நாளைக்கும் கப்பல் இருக்கும் இல்லையா.. அப்படியானால் கண்டிப்பாக நாளைக்கு மீண்டும் வா.. நான் காத்திருக்கிறேன்..” என்றாள்.

‘சரி’யென்று தலையசைத்தேன். ஜோ என்ன நடக்கிறது என்பது புரியாமல் என்னையும் பத்ரீஷியாவையும் ஆச்சர்யமாகப் பார்த்தான்.

ன்றைய மாலைப் பொழுதில் கிடைத்த புதுமையான அனுபவங்கள் தந்த பிரமிப்பு, இன்னும் என் மனதை விட்டு நீங்கவில்லை.

டாக்ஸி துறைமுக எல்லைக்குள் நுழைந்து எனது கப்பல் கட்டப்பட்டிருந்த ‘ஜெட்டி’ நோக்கிச் சென்றது..

(கடலோடு ஒட்டிக் கட்டப்பட்டுள்ள துறைமுகத்தின் தரைப்பகுதி ‘ஜெட்டி’ எனப்படுகிறது.. இதில் அமைக்கப் பட்டுள்ள சின்ன தூண் போன்றவற்றுடன் தான் கயிறுகள் மூலம் கப்பலைக் கட்டுவார்கள்)

சுதந்திரமாக அலைந்து திரிந்துவிட்டு, கப்பலிலிருந்து கரைக்கு இறக்கப் பட்டிருந்த இரும்பு ஏணிப்படியில் ஏறும் போது, மீண்டும் சிறைக்குள் செல்வது போல் மனதில் தோன்றி மறைந்ததை ஏனோ என்னால் தவிர்க்கவே முடியவில்லை..

கப்பலின் தளத்தில் நின்று நாங்கள் வருவதைக் கவனித்துக் கொண்டிருந்தான் அப்போது டியூட்டியில் இருந்த பிலிப்பினோ மாலுமி.

வழக்கமாக கப்பல் கடலில் செல்லும்போது நான்கு மணி நேர ‘வாட்ச் கீப்பிங்’ முறையில் பணியில் இருக்கும் ‘நேவிகேட்டிங்’ ஆபிஸர்கள் கப்பல் துறைமுகத்துக்கு வந்ததும் வேறு மாதிரி ஷிஃப்ட் முறைக்கு மாற்றிக் கொள்கிறார்கள்.

துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் பணி நடைபெறுவதால் சீஃப் (நேவிகேட்டிங்) ஆபீஸர் ஷிஃப்ட் பணி பார்ப்பதில்லை.. அதற்குப் பதிலாக இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆபிஸர்கள் பனிரெண்டு மணியிலிருந்து ஆறு மணி வரை ஒருவர், ஆறு மணியிலிருந்து பனிரெண்டு மணி வரை இன்னொருவர் என்று தங்கள் இருவருக்குள் டியூட்டியை பகிர்ந்து கொள்கின்றனர்.

நான் கப்பலுக்குப் போன சமயம் இரண்டாவது ஆபிஸர் மோஹித் பணியில் இருந்தான். அவனுக்கு உதவியாக ஒரு மாலுமியும் பணியில் இருந்தான்.

துறைமுகத்தில் கடல்நீர் மட்டம் எப்போதும் ஒரே அளவாக இருப்பதில்லை. ஒரு நாளில் மாறுபடும் நீர்மட்டத்தால், கப்பலின் உயரமும் அதற்கேற்றாற் போல், துறைமுக ஜெட்டியின் தளத்தைவிட வேறுபடும்.

கப்பலைக் கரையோடு கட்டப் பயன்படும் கயிறுகளின் இறுக்கமும் அடிக்கடி அதற்கேற்றாற் போல் மாறுபடுவதால், கயிறு அறுந்து போகாமல் கப்பலில் உள்ள ‘வின்ச்’(Winch) என்ற சாதனங்களின் மூலம் அந்தக் கயிறுகளின் இறுக்கத்தை அவ்வப்போது சரிப்படுத்துவது அந்த மாலுமியின் வேலை. அவன் தான் ஏணியையும் அடிக்கடி ஏற்றி இறக்கி வைக்கும் வேலையையும் செய்பவன்.

தளத்தில் நின்றிருந்த அவன், “என்ன.. பிரேஸிலைப் பார்த்தாயா.. பெண்கள் எல்லாம் எப்படி இருந்தார்கள்?” என்று கேட்டான்..

கேள்வியில் கேலியுடன் ஏக்கமும் தெரிந்தது.. காரணம் இல்லாமல் இல்லை. கப்பல் கட்டப்பட்டதிலிருந்து அவன் இன்னும் கரைக்குப் போகவில்லை..

அவனின் டியூட்டி நேரம் அப்படி.. நாளைக் காலையில் தான் அவன் கரைக்குப் போக முடியும். அந்த ஏக்கம் கண்களில் தெரிந்தது.

நான் சிரித்துக் கொண்டே என் அறை நோக்கிச் சென்றேன்.

நிறைய பேருக்கு கப்பலில் வேலை பார்பவர்களைப் பற்றி ஏராளமான கற்பனைகள் உள்ளன..

“உனக்கென்னடா.. நாங்கள் எல்லாம் கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும் பார்க்க முடியாத இடங்களையெல்லாம் , உனக்கு கைநிறைய கொட்டிக் கொடுத்து, ‘போ.. உலகத்தைச் சுற்றிப் பார்’ என்று பார்க்க வைக்கிறார்கள்..”- என்று என் நண்பர்கள் சொல்வார்கள்..

ஆனால் அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும்.

இங்கே நாங்கள் உல்லாசப் பயணிகள் இல்லை.. வேலை செய்ய வந்திருப்பவர்கள். இப்போதைய நவீன உலகத்தில் எல்லாமே அவசரம்.. அதனால் சரக்குக் கப்பல்கள் துறைமுகங்களில் தங்கும் நாட்களும் குறைவு.. சில இடங்களில் வெறும் ஏழு மணி நேரம் மட்டும் தங்கும்.

நாங்கள் உலகம் முழுதும் சுற்றிப் பார்க்கலாம் என்பது உண்மையே.. ஆனால் எல்லாத் துறைமுகங்களிலும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

‘கப்பலில் வேலை பார்ப்பவர்கள், ஏதாவது ஒரு துறைமுகத்துக்குப் போனவுடன், கப்பலை விட்டுவிட்டு, ஹோட்டலில் போய் தங்கிக் கொள்வீர்களா’ என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.

அப்படியெதுவும் இல்லை. கப்பலில் தான் தங்கவேண்டும். அதிலும் துறைமுகத்தில் இருக்கும் நாட்களிலும் வேலை இருக்கும்..

சொல்லப்போனால் கப்பல் கடலில் பயணம் செய்யும்போது செய்யும் வேலையை விட பல மடங்கு அதிக வேலை துறைமுகத்தில் இருக்கும் போது செய்ய வேண்டியிருக்கும்.. அதனால் பகல் முழுதும் வேலை செய்தே ஆக வேண்டும்..

சிலசமயம் கப்பல் அந்தத் துறைமுகத்தில் குறைந்த மணி நேரங்களே தங்க நேரிடும் போது, அந்த சிலமணி நேரத்துக்குள் பெரிய ரிப்பேர் வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தால் இரவும், பகலும் தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

எனவே நாம் ஆசைப்பட்டதற்காக, கப்பல் துறைமுகம் போய்ச் சேர்ந்ததும் கப்பலை விட்டுவிட்டு ஊர் சுற்றப் போய்விட முடியாது.. அதிலும் ஆபிஸர் ரேங்கில் உள்ளவர்களுக்கு பொறுப்பு அதிகம் என்பதால், எல்லா துறைமுகங்களிலும் வெளியே போவது சிரமம்.

கப்பல் கடலில் செல்லும் போது இயங்கும் இயந்திரங்களுக்குச் செய்ய வேண்டிய ரிப்பேர் வேலைகள், பழுது ஆகாமல் தடுக்க முன்கூட்டியே செய்ய வேண்டிய ‘Preventive Maintanence’ வேலைகளையும் துறைமுகத்தில் இருக்கும் போது தான் செய்யமுடியும்.

அதனால் இஞ்ஜினீயர்கள் பகலில் வெளியே செல்வது மிகவும் அரிது. ஒருவேளை எல்லா ரிப்பேர் பணிகளும் முடிந்து, சரக்கு ஏற்றி இறக்குவது காரணமாக கப்பல் அதிக நாட்கள் கரையில் தங்கும் வாய்ப்பு ஏற்பட்டால், பகலில் வெளியே செல்ல முடியும்.

இல்லையேல் மாலையில் தான் முடியும். இரவில் என்ன சுற்றி பார்க்க முடியும்?. கடல் மாலுமிகளின் சொர்க்க பூமியான ‘நைட் க்ளப்’பிற்கும், பார்களுக்கும் செல்லத்தான் நேரம் கிடைக்கும்.

சென்னைத் துறைமுகத்துக்கு வரும் வெளிநாட்டைச் சேர்ந்த கப்பல் பணியாளர்கள் இரவில் துறைமுகத்தை விட்டு வெளியே வந்து, பாரிமுனை பர்மா பஜாரையும், மிஞ்சிப் போனால் ஏதாவது ஒரு ஹோட்டல் பாரில் நுழைந்து பொழுதைக் கழித்து விட்டு, ‘இந்தியாவையே பார்த்து விட்டேன்’ என்று அவர்கள் ஊரில் போய் சொல்லிக் கொண்டால் எப்படியோ அப்படித்தான் எனக்கும்.

இதோ, நானும் இன்று பிரேஸிலின் ஒரு சின்ன துறைமுகத்திலுள்ள ஒரு பாருக்குச் சென்று, சில மணி நேரம் செலவழித்து விட்டு, எல்லோரிடமும் தென் அமெரிக்கக் கண்டத்திற்குப் போய் காலடி பதித்து விட்டேன் என்றும், பிரேஸிலுக்குப் போய் சுற்றிப் பார்த்து விட்டதாகவும் பெருமையடித்துக் கொள்ளப் போகிறேன்..

நான் பிரேஸிலில் என்ன சுற்றிப் பார்த்தேன் என்பது எனக்கு மட்டும் தானே தெரியும்!.

ஆனாலும், மற்றவர்களுக்கு கிடைக்காத அந்த அனுபவம் எனக்குக் கிடைத்தது என்ற சந்தோஷம் இருந்ததை மறுப்பதற்கில்லை. அந்த புதிய அனுபவம் தந்த மகிழ்ச்சி ஒருகணம் கப்பல் வாழ்வின் கசப்பை மறக்கடித்திருந்தது.

அதை நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன். அன்றிரவு தூக்கத்தில் குழப்பமாய் நிறைய கனவுகள் வந்தன.. ஒரு கனவில் நான் பார்பராவுடன் டான்ஸ் ஆடினேன்.. ஆடிக் கொண்டிருக்கும் போதே அவளின் முகம் திடீரென பட்ரீஷியாவாக மாறிப் போனது.

நான் அதெப்படி என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, பட்ரீஷியாவின் வயிறு பெரிதாக ஆரம்பித்தது.. அவள் நிறைமாத கர்ப்பிணி போல ஆகிவிட்டாள்.

“பட்ரீஷியா.. என்ன இது?” குழப்பத்துடன் நான் கேட்டேன்.

“நானா பட்ரீஷியா.. நான் வலேரியா.. நீ தான் இந்தக் குழந்தைக்கு அப்பா.. விட்டுவிட்டு இந்தியாவுக்கு ஓடிவிடாதே.. என்னையும் கூட்டிப்போ…” என்றாள் வலேரியா.

சீஃப் இஞ்ஜினீயர் திடீரென்று தோன்றி, “ஆமாம் கணேஷ்.. அவளைத் திருமணம் செய்து கொள்.. அவளைத் திருமணம் செய்ய மறுத்தால், உன்னை மறுபடியும் ‘பில்ஜ் க்ளீனிங்’ வேலையில் போட்டு விடுவேன்” என்றார்.

‘அய்யோ.. ‘பில்ஜ் க்ளீனிங்’ வேலையா.. வேண்டாம், நான் இவளையே திருமணம் செய்து கொள்கிறேன்..’- என்று கத்தினேன்..

பதறிப்போய் கண்விழித்த போது ஏழு மணி ஆகியிருந்தது.. நான் கனவு தான் கண்டேன் என்ற நிம்மதியுடன் எழுந்தேன்.

அன்று மாலை கப்பலை விட்டு மீண்டும் பாருக்குப் புறப்பட்டேன்.. ரோஸானா ஏதோ கேட்கப் போகிறேன் என்று சொன்னது நினைவில் வந்தது..

‘அப்படி என்ன கேட்க நினைத்தாள்’ என்ற கேள்வியுடன் ‘காஸப்ளாங்கா’ பாரை அடைந்தேன்…

(தொடரும்)

Post a Comment