கற்றது கடலளவு-11

அத்தியாயம்-11

பாரிலிருந்து இரண்டு நிமிட நடையில் பட்ரீஷியாவின் வீடு இருந்தது.

அது ஒரு குடியிருப்புப் பகுதி. ரோட்டின் இரண்டு புறமும் வரிசையாக சின்னச் சின்ன வீடுகள். சின்னதாக இருந்தாலும் வெளித் தோற்றத்திலேயே நல்ல அழகுடன் இருந்தன.

அவள் வீட்டின் முன்புறத்தில் சின்னதாக தோட்டம் போன்று பூச்செடிகள் நிறைந்திருந்தது..

அழைப்பு மணியை அழுத்திய சிறிது நேரம் கழித்து கதவு திறந்தது. அந்தப் பெண் தூக்கத்திலிருந்து எழுந்து வந்திருக்க வேண்டும்..

வாசலில் நின்ற எங்கள் இருவரையும் ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

“ரோஸி.. உனக்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்று இவரை வீட்டுக்குக் கூட்டி வந்தேன்.” என்று என் பெயர் சொல்லி அறிமுகப்படுத்தி, “நட்ராஜின் ஊர்ப்பக்கம் தான் இவரின் ஊரும்.. உன் டாடியின் ஊரைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்..”- அவளுக்கு அறிமுகப்படுத்தி விட்டு, என்பக்கம் திரும்பி, “நான் சொன்னேன் இல்லையா.. என் மகள் ரோஸானா” என்றாள்.

நான் “ஹலோ” என்றேன்.

அழகாக சிரித்து இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து வணங்கி, “நமஸ்கார்” என்றாள். எனக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி. எதிர்பார்க்கவும் இல்லை.

“என்ன, ரோஸி உங்கள் நாட்டு மொழி பேசுகிறாளே என்று பார்க்கிறாயா.. நட்ராஜிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட வார்த்தை இது. அவள் சரியாக உச்சரித்தாளா?” என்று கேட்டாள் பட்ரீஷியா.

“அது மட்டுமில்லை.. இந்திய வாழ்க்கை முறை, இந்தியா சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களைப் படித்து நிறையவே தெரிந்து வைத்துள்ளேன்” என்றாள் ரோஸானா.

எனக்கு அவள் பேசிய எதுவும் மனதில் நிற்கவில்லை. அவளைப் பார்த்ததிலிருந்து ஏனோ அந்த முகத்தில், அந்த கண்களில் தெரிந்த இனந்தெரியாத ஈர்ப்பில் அதற்கான காரணம் தேடி என்னை மறந்து யோசித்துக் கொண்டிருந்தேன். பார்த்த உடனேயே சிலரின் முகம் நமக்குப் பிடித்துப் போகும். காரணம் என்னவென்றே தெரியாது.. அது போலத்தான் இப்போதும்.

“என்ன ஆனது உங்களுக்கு.. ஏன், என் முகத்தையே அப்படிப் பார்க்கிறீர்கள்..”- அவளது ஆங்கில உச்சரிப்பு மிக மென்மையாக இருந்தது.

நல்ல உயரம்.. உருண்டையான அழகான முகத்தில், அளவெடுத்தது போன்ற பொருத்தமான கச்சிதமான மூக்கு.. சிரித்தபோது பளிச்சென்ற பல்வரிசை..

பொன்னிறத்தில் இருந்த தலைமுடியை பின்புறமாக வாரி, பின்னால் ஒற்றையாக சிவப்பு கலரில் ரிப்பன் போல ஏதோ ஒன்று வைத்துக் கட்டியிருந்தாள். கோதுமை நிறத்தில் இருந்த அவளின் கழுத்துக்குப் பின்னால் அந்த சிவப்பு நிற ரிப்பன் தெரிந்தது..

கழுத்தை ஒட்டிக் கொண்டு மெலிதான செயின் ஒன்று சிலுவையுடன் தொங்கியது.

காலர் வைத்த சிவப்பு நிற சட்டையும், பல வண்ணங்களில் கட்டங்களுடன் இருந்த கருப்பு கவுனும் அணிந்திருந்தாள்.. முழங்கால் தாண்டி கீழே வரை இருந்தது கவுன்.. சட்டையை கவுனுக்குள் ‘இன்’ செய்திருந்தாள்..

ஏனோ சூர்யகாந்திப்பூ அந்த நேரத்தில் நினைவில் வந்தது.. வானவில் ஒன்று தரையிறங்கி என் முன்னால் தரையில் நிற்பது போல ஒரு சந்தோஷம் அந்த வினாடியில்..

முகத்தோற்றத்தில் அவளுக்கும் பட்ரீஷியாவுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.. ஒரு இந்தியப் பெண்ணின் சாயல் இருந்தது.

“என்ன.. என் முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள்.. உள்ளே வாருங்கள்.”- மென்மையாக சிரித்தாள்.

ஏனோ தெரியவில்லை. ‘ரோஸானா’ என்ற பெயர் உடனேயே பிடித்துப் போனது.

த்ரீஷியாவின் வீடு பளிச்சென்று இருந்தது. ஒவ்வொரு பொருளும் மிக நேர்த்தியாக சரியான இடத்தில்
இருப்பதாகத் தோன்றியது. அதுவே அந்த வீட்டின் அழகை அதிகப்படுத்திக் காட்டியது.

“வீட்டை மிகவும் அழகாக வைத்திருக்கிறீர்கள்” – நான் பட்ரீஷியாவைப் பார்த்து சொன்னேன்.

அவள் ரோஸானா பக்கம் திரும்பி புன்னகைத்தாள்.

“எனக்கெங்கே இதற்கெல்லாம் நேரம் கிடைக்கும். இரவு முழுதும் பாரில்.. பகல் முழுதும் தூங்கத்தான் முடியும்.. எல்லாம் ரோஸியின் திறமை..”

ரோஸானா வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டாள். பதினைந்து வயது என்று நம்ப முடியாது.. பெரிய பெண்ணாகத் தெரிந்தாள்.

“இரண்டு பேரும் பேசிக் கொண்டிருங்கள். நான் சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறேன்.”. எங்களை தனியாக விட்டுவிட்டு பட்ரீஷியா உள்ளே போனாள்.

நான் ரோஸானாவிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் அந்த ஹாலில் உள்ள ஒவ்வொரு பொருளாகப் பார்த்தேன்.

சுவரில் ஒரு ஓவியத்தில் சின்ன வயது ரோஸானா வயலட் நிற உடையணிந்து இருந்தாள்..
பெயிண்ட்டிங் அது..

“என்னை நானே படமாக வரைந்தேன்”- என் பார்வை அந்த ஓவியத்தில் படுவதைப் பார்த்து ரோஸானா சொன்னாள்.

“ரோஸி மிக அழகாக ஓவியம் வரைவாள்.” – சொல்லிக் கொண்டே வந்த பட்ரீஷியா ஸாண்ட்விச் கொண்டு வந்து வைத்துவிட்டு மீண்டும் உள்ளே போனாள்.

“ஏன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறீர்கள்.”- ரோஸானா தான் பேசினாள்.

நான் அவள் பக்கம் திரும்பி புன்னகைத்தேன். பட்ரீஷியா என்னை வீட்டுக்கு கூட்டி வந்தது இவளுக்குப் பிடித்ததா, இல்லையா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.அதை அவளின் முகத்திலிருந்து கண்டுபிடிக்க முடியவில்லை..

பேசுவதற்கு வேறு எதுவும் தோன்றாத சூழ்நிலையில் சிறிது தயக்கத்துடன் மெதுவாகக் கேட்டேன்.

“என்னை இங்கே கூட்டி வந்ததற்கு உன் மம்மி மேல் கோபம் வரவில்லையா..”

அவளிடமிருந்து தாமதமில்லாமல் பதில் வந்தது.

“நோ நோ.. மம்மி இதுவரை யாரையும் வீட்டுக்கு அழைத்து வந்ததில்லை.. நீங்கள்தான் முதல் ஆள்.. என்னை ‘பார்’ பக்கமே வரக்கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறாள். உங்களை வீட்டுக்கு கூட்டி வந்ததும் எனக்கும் கூட ஆச்சர்யம்.

மம்மி பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். இத்தனை வருடங்களில் மம்மி இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்ததே இன்றுதான்.. அதுவும் கொஞ்சம் நிதானமாகவே இருக்கிறாள்.. காரணத்தை நீங்களே சொல்லிவிடுங்களேன்..”

இவள் சொல்வது உண்மையென்றால் பத்ரீஷியா நிச்சயமாய் என்னை மதித்து இருக்க வேண்டும்.அவள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லவேண்டும் என்று தெரியவில்லை.

சிறிது நேரம் கழித்துக் கேட்டேன். “ரோஸானா.. உனக்கு உன் மம்மி வாழ்க்கை மேல் கோபமே இல்லையா..?”

முட்டாள் நான்.. அவளிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாமோ என்று அதன்பின் தான் நினைத்தேன்.

அவள், ‘இல்லை’யென்று தலையசைத்தாள்.

“உங்களுக்கு என் மம்மி பற்றி சரியாகத் தெரியாது.. அவள் என்மேல் உயிரையே வைத்திருக்கிறாள்.. அவளுக்குப் பிடித்து இந்தத் தொழில் செய்யவில்லை.. என்னை டாக்டராக்க வேண்டுமென்பது அவள் ஆசை.. என் ஆசையும் கூட.. அதற்காகப் பணம் சேர்க்கிறாள்.. எனக்காகத் தான் அவள் இன்னும் இந்தத் தொழிலிலேயே இருக்கிறாள்..

அது போகட்டும்.. என் டாடியை நீங்கள் பார்ப்பீர்களா?.. பார்த்தால் கண்டிப்பாக நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.. எனக்கும் இந்தியாவைப் பார்க்க ஆசையாக உள்ளது. டாடியையும் தான்.. நான் டாக்டர் ஆனவுடன் கண்டிப்பாக என்னை இந்தியா அனுப்புவதாக மம்மி ப்ராமிஸ் செய்திருக்கிறாள்.”

அவள் கண்களில் தெரிந்த கனவை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

“என்ன சொல்கிறாள் ரோஸி.. இந்தியா வரவேண்டும் என்று தானே..” கேட்டுக் கொண்டே வந்தாள் பட்ரீஷியா.

நட்ராஜுக்கு இப்படி ஒரு பெண் இருப்பது தெரியக் கூட செய்யாது. இப்போது இந்தப் பெண் இந்தியா போய் ‘டாடி’ என்றால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்.

“என் மகளோடு பேசினாயா.. ஒருமுறை அவளை உன் ஊருக்குக் கூட்டிப்போய், நட்ராஜைக் கண்டுபிடித்துக் காட்டிவிடு.. அவளுக்கு நிம்மதியாக இருக்கும்”

நான் ரோஸானாவைப் பார்த்து புன்னகைத்தேன்..

“இப்போதே ரெடி.. நான் ஊருக்குப் போனதும் முதல் வேளையாக உன் டாடியைக் கண்டுபிடித்து உன்னைக் கூட்டிப் போய் காட்டுகிறேன்.. சந்தோஷமா..”

அது சாத்தியமா என்றெல்லாம் அந்த நேரத்தில் யோசிக்கவே இல்லை.. அவளை சந்தோஷப்படுத்த அது உதவும் என்ற எண்ணத்தில் அப்படிச் சொல்லிவிட்டேன். அவள் மென்மையாக சிரித்தாள்.

அவளது இடது கையில் ராக்கி மாதிரி கயிறு கட்டியிருந்தாள்… ஆனால் அது நூல் போல் இல்லாமல் மெல்லிய துணி போல் இருந்தது. ஏதோ எழுத்துக்களும் அதில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தன.

“என்ன இது கையில்.. ” என்று கேட்டேன்.

“Fita de Sorte என்று இதற்குப் பெயர்..”

“எங்கள் நாட்டில் இதை ‘ராக்கி’ என்பார்கள். தனக்குப் பின்னால் சுற்றும் இளைஞனைப்
பிடிக்கவில்லை என்றால், அவன் கையில் கட்டிவிட்டு சகோதரனாக்கி விடுவார்கள் எங்கள் ஊர்ப் பெண்கள்.. எனக்கு நிறைய பேர் கட்டி விட்டார்கள்.. நீ யார் பின்னால் சுற்றினாய்.?”

அவள் சிரித்தாள்.

“இது யாரும் கட்டிவிட்டதில்லை.. நானே கட்டிக் கொண்டேன்..எங்கள் நாட்டு வழக்கம்..ஒருவிதத்தில் அதிர்ஷ்டக் கயிறு மாதிரி..”

“நீ எதற்காக இதைக் கட்டியிருக்கிறாய்..”

“இந்தக் கயிறைக் கட்டிக் கொள்ளும் போது மனதில் மூன்று ஆசைகளை நினைத்துக் கொள்ள வேண்டும்.. இதை அவிழ்க்கவே கூடாது.. இது தானாக நம் கையிலிருந்து விழுவதற்குள் நம்முடைய மூன்று ஆசைகளும் நிறைவேறிவிடும்.. இது எங்களின் நம்பிக்கை..” என்றாள்.

“அப்படி என்ன மூன்று ஆசைகளை நீ நினைத்துள்ளாய்?”

“அதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்பது முக்கியமான கட்டுப்பாடு.. சொன்னால் அது பலிக்காது..” என்று சிரித்தபடியே சொன்னவள், “எல்லாம் நிறைவேறிய பின் உங்களைச் சந்தித்தால் கண்டிப்பாக சொல்கிறேன் “- சொல்லிவிட்டு வெட்கத்துடன் தலைகுனிந்தாள்.

இடது கையிலிருந்த அந்தக் கயிற்றை வலது கை விரல்களால் லேசாக தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.

எனக்கு நினைத்துப் பார்க்கையில் எல்லாமே ஆச்சர்யமாக இருந்தது. ஏதோ நீண்ட நாள் பழகியவர்களோடு இருப்பது போல் ஒரு உணர்வு தோன்றியது.. நீண்ட நாட்களுக்குப் பின் மனதில் எந்தவித கவலையின்றி சந்தோஷமாக இருப்பதாகவும் உணர்ந்தேன்..

திரும்பும்போது ரோஸானா தெருமுனை வரை வந்து வழி அனுப்பி வைத்தாள்.

விடைபெறும் முன் “நாளைக்கும் வருவீர்களா.. கப்பல் இருக்குமில்லையா” என்று கேட்டாள்.

“கப்பல் நாளை மறுநாள்தான் புறப்படும்” என்றேன்.

“அப்படியானால் கண்டிப்பாக நாளை மறுபடியும் வாருங்கள்.. உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் கேட்க வேண்டும்.. வருவீர்களா.. ?” என்று என் முகத்தைப் பார்த்து சொல்லிவிட்டு வெட்கத்துடன் தலைகுனிந்தாள்.

நேரமிருந்தால் கண்டிப்பாக வருவதாகச் சொல்லிவிட்டு அவளிடம் விடைபெற்றேன்..

‘என்ன அப்படி முக்கியமான விஷயம் சொல்லப் போகிறாள்’ என்ற ஆர்வம் மனதுக்குள் கேள்வியாக எழுந்தது…

மறுநாள் அவள் கேட்ட அந்தக் கேள்வி என்னை சிக்கலில் மாட்டிவிட்டது

(தொடரும்)

please visit my blogspot page www.kadalganesan.blogspot.com

Post a Comment