நான் விகடனில் மாணவ நிருபர் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப் பட்டபோது சென்னையில் எங்களுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது..
எழுத்தாளர்கள், காவல்துறையின் உயர் அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள், கவிஞர்கள் என்று பலர் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர் பயிற்சி பெற வந்திருந்த எங்களுக்கு யோசனைகளும், அறிவுரைகளும் தந்தனர்..
நடிகர் சிவகுமார் ஒரு நாள் வந்தார்.. இன்னொரு நாள் எழுத்தாளர் சுஜாதா..
சுஜாதா பேசும் போது, “எதையும் சுருக்கமா சொல்லுங்க.. ‘வளவளா’-வே தேவையில்லை.. நேரா விஷயத்துக்கு வாங்க..ஒருத்தர் உங்ககிட்ட ‘சாப்பிட்டாச்சா’ன்னு கேள்வி கேட்டா, ‘சாப்பிட்டாச்சு’ன்னு பெரிசா ஏழு எழுத்தில் எழுதாம ‘ஆச்சு’ன்னு மூணு எழுத்தில் சொன்னாவே அர்த்தம் புரியும்..
அதுகூட தேவையில்லை.. ‘சு’ன்னு ஒரு எழுத்தில் எழுதினால் அது தான் நல்ல எழுத்தாளன் செய்யக் கூடிய வேலை” -என்றெல்லாம் அழகாக நிறைய டிப்ஸ் கொடுத்தார்..
(அவர் சொன்னது நல்லாத்தான் இருந்தது.. ஆனால் இன்னிக்கு வரைக்கும் எதையும் ‘நீட்டி முழக்காமல்’ எனக்கு சொல்லத் தெரிந்ததேயில்லை..
கேர்ள்பிரண்ட் கிட்ட “ஐ லவ் யூ’ன்னு சொல்றதுக்காக முப்பது பக்கம் ரெண்டு கோடு போட்ட நோட்டு வாங்கி, எழுதிப் பார்த்து, ஆறுமணி நேரம் ஊர்க்கதை பேசி, பயந்து பயந்து, “நானும் தாங்களும் மனமொத்து ஒன்றிணைந்து பழக தங்கள் திருவாய் மலர்ந்து சம்மதம் தருவீர்களானால், எந்தன் உள்ளக்கிடங்கில் ஒளித்து வைத்திருக்கும் ரகசிய ஆசைகளை வெளிப்படுத்துவேன்” என்ற ரேஞ்சில் வசனம் பேசி, நான் டாவடிக்க நினைத்த பொண்ணு சிதறி, எஸ்கேப் ஆன கதை இங்கே வேணாம்.)
சொல்ல வந்தது அது அல்ல.. எங்கள் குழுவில் ஒரு தோழி இருந்தார்.
நாங்கள் எல்லோரும் சுஜாதாவிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருந்தோம்.. அவரும் நாங்கள் நீட்டிய இடத்தில் எல்லாம், ‘சுஜாதா’ என்று பெயரை மட்டும் எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்..
அவருக்கு சுஜாதா சும்மா பெயர் மட்டும் எழுதுவது போதவில்லை..
அவரிடம் “வெறும் பேர் மட்டும் எழுதாதீங்க சார்.. Please write something and sign” என்று கெஞ்சினார்.
சுஜாதாவும் சீரியஸாக தோழி நீட்டிய ஆட்டோகிராப் நோட்டை வாங்கி SOMETHING என்று எழுதி அதன் கீழ் சுஜாதா என்று கையெழுத்திட்டார்.
அவ்ளோதான்… சுஜாதா எழுதிக் ‘கொடுத்த’ சம்திங் இதுதான்..
பொன்சந்தர் said,
June 1, 2007 at 11:40 am
நன்று ! ! ! மலரும் நினைவுகள் ! ! ! !
suresh said,
April 8, 2008 at 11:21 pm
நானும் முன்னால் மாணவ நிருபன் தான் .
2003 பேட்ச்
எழுத நிறைய இருக்குமே.. எழுதலாமே …
இத்தளத்தை உடனே என் favourites’ல் சேர்த்துவிட்டேன்