கற்றது கடலளவு -10

அத்தியாயம்-10

என் கைபிடித்து இழுத்த பார்பராவின் கையை மெதுவாக விலக்கி விட்டு, “என்னைக் கொஞ்சம் தனியாக விடுகிறாயா.. ப்ளீஸ்”- என்று அவளிடம் கெஞ்சினேன்.

எனது கைகளை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தவளை, “ஹேய் பார்பரா.. உன்னை ‘மாமசாங்’ கூப்பிடுகிறாள்”- என்று யாரோ கூப்பிடுவதாகச் சொல்லி அந்த சமயத்தில் அங்கே வந்து நின்ற பெண்ணுக்கு முப்பது வயது இருக்கலாம்.

(‘மாமசாங்’ என்ற வார்த்தை எல்லா கப்பல்வாசிகளுக்கும் அறிமுகமான வார்த்தைதான். இந்த மாதிரியான இடங்களுக்கெல்லாம், ‘மாமசாங்’ என்பது தலைவிப் பொறுப்பில் உள்ளவளைக் குறிக்கும்.

கிட்டத்தட்ட, நம்மூரில் பெரிய உடம்பு வைத்துக் கொண்டு, வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்து, பெரிய சைஸ் குங்குமப் பொட்டு, வெற்றிலை சிவப்புடன் சினிமாவில் காட்டும் ‘பெரிய அக்கா’ மாதிரி.)

புதிதாக வந்து நின்றவள் என்னைப் பார்த்து, “ஹாய்.. உன்னைப் பார்த்தால் இந்தியன் போல் தெரிகிறது” என்றாள். வேறு வழியில்லாமல் ‘ஆம்’ என்று தலையசைத்தேன்.

இதற்குள் என் கைகளை உதறிய பார்பரா, என்னைக் கைகாட்டி புதிதாக வந்தவளிடம் கோபமாக சொன்னாள்.

“வோஸே நோ ஃப்யுமா.. வோஸே நோ பேபே.. வோஸே நோ டன்ஸா..”- கோபத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டே, இன்னும் ‘கொஞ்சம் ஏதோ’ சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டுப் போனாள். (அதற்குப் பின் அவள் சொன்ன ‘கொஞ்சம் ஏதோ’ வார்த்தைகள் சென்ஸார் செய்யப்பட்டுள்ளது.. இங்கே தரப்படவில்லை)

எனக்கு அவள் சொன்னதின் அர்த்தம் எதுவும் புரியவில்லை. ஆனால் அது ஆங்கிலம் இல்லை என்பது மட்டும் தெரிந்தது.

புதிதாக வந்தவள், பார்பரா திட்டிவிட்டுப் போவதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பின் என்னைப் பார்த்தாள்.

எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. அவள் மெதுவாக என்னருகே இருந்த சேரில் அமர்ந்தாள்.

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. ஐ லைக் இண்டியன்ஸ் வெரி மச்” என்றாள்.

பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தேன். ‘பிடித்தால் எனக்கென்ன’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

அந்த பார்பரா சில நிமிடங்களில் என்னை ஒரு வழி பண்ணியிருந்தாள். அதனால் இவளைப் பார்த்தபோது அதே எரிச்சல் இருந்தது.

“ஏனென்று கேட்க மாட்டாயா?”

“ஏன்” என்று கேட்டு வைத்தேன் வேறு வழியில்லாமல்.

“ஏனென்றால் என் மகள் ஒரு இந்தியனுக்குப் பிறந்தவள்.. உனக்கு VIZAG தெரியுமா..?”

“ம். தெரியும். நான் அங்கே தான் டிரெயினிங் செய்தேன்” என்றேன்.. (விசாகப்பட்டினத்தை Vizag என்று சுருக்கமாக அழைப்பது வழக்கம்.)

நான் சொல்லி முடிக்கவும் அவள் முகத்தில் பளீரென ஒரு பிரகாசம் தெரிந்தது.

“ஓ. நிஜமாகவா.. அப்படியானால் உனக்கு நட்ராஜைத் தெரியுமா?” -மிகவும் ஆர்வத்துடனும், நிஜமான எதிர்பார்ப்புடனும் கேட்ட அவளைப் பார்த்தால் பரிதாபமாகத் தோன்றியது.

விசாகப்பட்டினத்தில் உள்ள எத்தனையோ லட்சம் பேரில் இவள் குறிப்பிடும் ‘நட்ராஜை’ எப்படி எனக்கு தெரிந்திருக்கும் என்று எதிர்பார்க்கிறாள்.?. ஒருவேளை ‘மடீரா’ போல் சின்ன ஊராக நினைத்து இருக்க வேண்டும்.

“தெரியாது.” என்றேன் நான்.

“நட்ராஜ் என் பெண்ணுக்கு அப்பா”

“ஓ.. உன் கணவனா?”

“இல்லையில்லை..” என்றாள் அவசரமாக.

“உன்னைப் போல் நட்ராஜும் கப்பலில் வேலை செய்பவர் தான். அவர் ஒரு மாலுமி. பதினைந்து வருஷம் முன்பு சந்தித்தேன். அவரைப் பார்த்தவுடன் எனக்கு அவருடன் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

அப்போது அவருடைய கப்பல் துறைமுகத்துக்கு வெளியே பதினைந்து நாள் நங்கூரமிட்டு இருந்தது. பதினைந்து நாளும் நான் நட்ராஜோடு தான் இருந்தேன். அதற்குப் பின் நட்ராஜை நான் பார்க்கவேயில்லை.. அட்ரஸ் கூட இல்லை..” – சொல்லி முடித்து விட்டு திடீரென சோகமாகிப் போனாள்.

முதலில் ‘இதெல்லாம் என்ன கதை’ என்று தோன்றியது. ஆனால் அவள் சொல்வதைப் பார்த்தால் உண்மை என்றும் தோன்றியது.

நான் இந்தியன் என்றவுடன் யாரோ ஒரு நட்ராஜுக்குத் தான் குழந்தை பெற்றுக் கொண்டதை பெருமிதத்துடன் சொல்லும் அவளைப் பார்க்கும்போது வியப்பாகவும் இருந்தது.

அவளிடம் மேலும் பேச வேண்டும் என்று ஏனோ தோன்றியது.

“உன் பெயரென்ன”- என்று கேட்டேன்.

“பட்ரீஷியா.. என்னை உனக்குப் பிடிக்கிறதா..”

எடுத்த எடுப்பிலேயே இப்படித்தானா கேட்பது?…
‘பிடித்திருக்கிறது’ என்று சொன்னால் ‘உன்னிடமும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று கேட்டாலும் கேட்பாளோ என்று நினைத்தேன்..

என்னையும் மீறி சிரித்து விட்டேன்.

“ஏன் நீயாகவே சிரித்துக் கொள்கிறாய்?” நான் சிறிது தயங்கிவிட்டு, நினைத்ததைச் சொன்னேன்.

அவள் இடதுபக்கம் தலையைச் சாய்த்து என் முகத்தை சில வினாடிகள் உற்றுப் பார்த்து விட்டு, பின் அவளும் சிரித்தாள்.

அந்த நிமிடத்தில் என்னை நினைத்து நான் ஆச்சர்யப்பட்டேன்.

‘நான் தானா இது.. முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணிடம் இவ்வளவு சுலபமாக எப்படிப் பேசினேன்..

அதுவும் மிகவும் நெருக்கமாக குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றிப் பேசும் அளவுக்கு..

‘ கடல் வாழ்க்கை என்னை மாற்றத் தொடங்கி விட்டதை நான் உனர்ந்து கொண்ட நிமிடம் அது.. இந்த பதினைந்து நாள் கடல் வாழ்க்கை என்னை நிறையவே மாற்றி விட்டது..

எனக்குள்ளே இத்தனை வருடங்களாக பூட்டியிருந்த ஏதோ ஒரு விலங்கு சட்டென்று உடைந்து போனது போல ஒரு உணர்வு..

‘எப்படி இதையெல்லாம் நினைக்கவும் முடிகிறது’ என்று ஆச்சர்யப்பட்டேன்.

அதைவிட, முன்பின் அறிமுகம் இல்லாத இவளிடம் எப்படி மனதில் நினைத்ததையெல்லாம் வெளிப்படையாக சொல்லிவிட முடிந்தது.?

கப்பல் வாழ்க்கை செய்த மாற்றம் தானா?.. ஆனால் அதுமட்டுமே காரணம் இல்லையென்று தோன்றியது. அவளுக்கு முன் பேசிக் கொண்டிருந்த பார்பராவிடம் பேசுவதற்குக் கூட தயக்கம் இருந்தது. ஆனால் இவளிடம்தான் இத்தனை வெளிப்படையாக பேசினேன்.

ஏதோ ஒன்று அவளிடம் பேச வைத்து விட்டது. பட்ரீஷியா இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தாள்.

பின் என்னை உற்றுப் பார்த்துவிட்டு சொன்னாள்.

“உன்னைப் பார்த்து அப்படி கேட்க எனக்கு மனமே வரவில்லை.. ஆனால், பார்பரா திட்டிவிட்டுப் போவதைப் பார்த்தால் உன்னிடம் அது சாத்தியமும் இல்லை என்றல்லவா தோன்றுகிறது..”

சிந்தனையிலிருந்த என்னை அவளின் பேச்சு இழுத்தது.

“ம்.. என்ன கேட்டாய் இப்போது?.” அவள் திரும்பவும் சொன்னாள்.

அவள் சொல்லி முடிக்கவும், அந்த பார்பராவே திரும்ப அங்கே வந்துவிட்டாள்.

“ஹேய் பட்ரீஷியா.. இது கோக்கோ கோலா கேஸ்.. வேஸ்ட்.. வேறு ஆளை பிக்-அப் செய்து கொள்.”- என்று சொல்லிவிட்டுப் போனாள்.

போகும்போது என்னை ஏளனமாகவும் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனாள்.

“அவள் என்ன சொல்லித் திட்டிவிட்டுப் போனாள்.. என்ன மொழி அது?”

“அது எங்கள் மொழி.. போர்த்துக்கீசு கலந்தது.. நான் வந்து நின்றபோது அவள் சொல்லிவிட்டுப் போனதெல்லாம் உண்மையா”

“அவள் என்ன சொன்னாள் என்று எனக்கு எப்படி புரியும்?”

“அவள் சொன்னதை அப்படியே ஆங்கிலத்தில் சொல்லவா.. நீ சிகரெட் புகைக்க மாட்டாய்.. குடிக்கவும் மாட்டாய்.. டான்ஸ் ஆடவும் வர மாட்டாய்..”- என்று சொல்லிவிட்டு, ஏதோ சொல்ல வந்து, பின் தயக்கத்துடன் நிறுத்தினாள்.

“அவ்வளவுதான் சொன்னாளா?”

“இல்லை. இன்னொன்றும் சொன்னாள்.” என்று மறுபடியும் தயங்கி விட்டு, “வேறென்ன.. படுக்கைக்கும் வரமாட்டாய்.. பின் எதற்கு உன்னை மாதிரி ஆள் இந்த இடத்திற்கு வர வேண்டும் என்று கேட்டுவிட்டுப் போகிறாள்”- சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தாள்.

எனக்கும் அந்த நேரத்தில் சிரிப்பு தான் வந்தது. இந்த இடத்தில் எனக்கென்ன வேலை.. இந்த மாதிரி இடத்துக்கு வந்துவிட்டு, எதிலுமே சேர்த்தி இல்லையென்றால் அவளுக்கு கோபம் வந்து திட்டிவிட்டுப் போனதில் தவறே இல்லை என்று தோன்றியது.. உண்மைதானே..

பட்ரீஷியா என்னை உற்றுப் பார்த்துவிட்டு, “அவள் சொல்வதெல்லாம் உண்மையா.. பின் ஏன் இந்த இடத்திற்கு வந்தாய்?”

நான் மனதுக்குள் கேட்டுக் கொண்டதையே அவளும் கேட்டாள். ஏனோ அவளிடம் சொல்லிவிட மனம் வந்தது.

“கப்பல் ஒரு ஜெயில் மாதிரி இருந்தது.. அதிலிருந்து கொஞ்ச நேரமாவது சுதந்திரமாக ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்று என் நண்பன் கூட்டி வந்தான்..”

அப்போது தான் கவனித்தேன்.. ஜோ அங்கே இல்லை.. அந்த ஹெலனோடு போயிருக்க வேண்டும்.

மேஜையில் முழங்கைகளை ஊன்றி கன்னத்தில் முகத்தைத் தாங்கிக் கொண்டு அவள் என்னையே மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாள்..

ஒரு பையன் மேஜை அருகே வந்தான்.

“ஒரு பீர்.. ஒரு கோக்..”- என்று ஆர்டர் செய்தாள்..

நான் பணத்தை எடுத்துக் கொடுத்தேன். அவள் அந்தப் பையனிடமிருந்து வாங்கி திரும்ப என் சட்டைப் பையினுள் வைத்தாள்.

அவளது முயற்சியை தடுக்க விரும்பினேன்.. ஆனால், அவளுடைய கையைப் பிடித்துத் தான் அதைச் செய்ய வேண்டி வரும் என்ற தயக்கம் தோன்ற, சிறிது சங்கோஜப்பட்டேன்..

“இத்தனை வருடங்களாக எனக்கு மற்ற ஆணகள் டிரிங்க்ஸ் வாங்கித் தந்திருக்கிறார்கள்.. இன்று உன்னைப் பார்த்ததும் எனக்கு ஏதோ தோன்றியது.. ப்ளீஸ்.. என்னைப் பணம் கொடுக்க அனுமதி..

நான் ஒரு விலைமாது தான்.. ஆனால் எனக்கும் உணர்வுகள் உணடு.. இன்று ஒரு நாள் நீ என் விருந்தாளியாக இரு.. ப்ளீஸ்”- என்று என்னைப் பார்த்து சொன்னாள்.

அவள் குரலும் மாறியிருந்தது.. எனக்கு அவளின் திடீர் மாறுதல் ஆச்சர்யமாக இருந்தது..

“இங்கே வருபவர்கள் எல்லாம் குடித்துவிட்டு எங்கள் உடலைத் தொட்டு அனுபவிக்க வருவார்கள்.. ஆனால் பத்து நிமிடங்கள் உன்னுடன் இருக்கிறேன்.. என்னைத் தொடக்கூட நினைக்க்வில்லை.. நீ கப்பலில் என்னவாக இருக்கிறாய்..”

“ஜூனியர் இஞ்ஜினீயர்.. இதிலே ஆச்சர்யப்பட எதுவுமில்லை.. நான் இந்த வாழ்க்கைக்குப் புதிது.. இதுதான் முதல்முறை.. இன்னும் எதுவும் பழக ஆரம்பிக்கவில்லை.. அடுத்த முறை என்னை சந்தித்தால், கண்டிப்பாக நானும் நன்றாக குடிக்க ஆரம்பித்து இருப்பேன்.. மற்றவர்களைப் போல் உங்களின் உடம்புக்காகவே வருபவனாகி விடக்கூடும்.”

நான் சொல்லவும் அவள் மறுத்தாள்..

“இல்லையில்லை.. உன்னைப் போல் கப்பலில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் இங்கே வந்த எத்தனையோ பேரை நான் பார்த்து இருக்கிறேன். அவர்களிடம் கூச்சம் இருக்கும்.

என்னைத் தொட்டால் நான் எதுவும் நினைத்துக் கொள்வேனோ என்ற பயத்தில் தொடாமல் இருப்பார்களே தவிர, கண்டிப்பாக உன்னைப் போல் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டு இருக்க மாட்டார்கள். நீ மாற மாட்டாய். என நினைக்கிறேன்”

என்னைவிட, அவள் என்மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக அப்போது தோன்றியது.

பீரும் கோக்கும் வந்தது. அதன்பின் நிறைய பேசினாள். இடையே சிலர் வந்து அவளை டான்ஸ் ஆடுவதற்கு அழைத்தனர். சிலர் தனியே அறைக்கு அழைத்தனர்.

அவள் யாருடனும் போகவில்லை. அவள் குடும்பத்தைப் பற்றி சொன்னாள். இந்த வாழ்க்கையில் நுழைந்த கதை சொன்னாள்.

பத்து வயது சிறுமியாக இருக்கும் போதே சண்டை போட்டு பிரிந்து விட்ட அவளின் பெற்றோர்…அவர்கள் இருவருமே வேறு வேறு திருமணம் செய்து கொண்டதை..

அவளை அன்போடு கவனிக்க ஆளில்லாமல் வாழ்க்கையில் திசைமாறி கடைசியில் இந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தது பற்றி எல்லாமே சொன்னாள்.

அவள் மகளைப் பற்றி நிறைய சொன்னாள்.

“உனக்குத் தெரியுமா.. என் மகள் நிஜமாகவே நல்ல புத்திசாலி.. என்னைப்போல் இல்லை.. நான் இந்த வாழ்க்கையில் இருப்பதே அவளுக்குப் பிடிக்கவில்லை..

எந்த காரணத்தைக் கொண்டும் அவளை இந்த பார் பக்கம் மட்டும் வரவிட மாட்டேன்.”- உணர்ச்சி வசப்பட்டு பேசிய அந்தப் பெண்ணிற்குள் ஒரு அக்கறையுள்ள நல்ல தாய் இருப்பது புரிந்தது.

மணி பத்தாகி விட்டிருந்தது.. நேரம் போனதே தெரியவில்லை.. நிறைய குடித்தாள். எத்தனையோ முறை முயற்சித்தும் என்னை பணம் கொடுக்க அனுமதிக்கவில்லை..

“நோ.. இன்று நீ என் விருந்தாளி” என்று கண்டிப்பாக தடுத்து விட்டாள்.

ஜோவும் அந்தப் பெண்ணும் காணாமல் போய் நீண்ட நேரமாகி விட்டது.

“உன்னை ஒன்று கேட்பேன்.. மறுக்க மாட்டாயே..” என்ன கேட்டு வைக்கப் போகிறாள் என்று யோசித்தேன்..

“பயப்படாதே.. குழந்தை வேண்டும் என்று கேட்க மாட்டேன்.”-சிரித்து விட்டு, “என் வீடு இங்கே பக்கத்தில் தான்.. இரண்டு நிமிடம் நடந்தால் போதும்.. என் மகளை உனக்கு அறிமுகப் படுத்துகிறேன்..

நீ Vizag-ல் இருந்திருக்கிறாய் என்று தெரிந்தால் அவள் மிகவும் சந்தோஷப் படுவாள்.. அவளுக்கு நட்ராஜைப் பார்க்க நிறைய ஆசை.. என்னோடு வீட்டுக்கு வருகிறாயா”

இந்த சிலமணி நேரப் பழக்கத்தில் ஏதோ நீண்ட காலம் பழகிய தோழி போன்ற உணர்வு தோன்றியது.

சிறிது தயக்கம் இருந்தது.. ஜோ தென்படுகிறானா என்று சுற்றிலும் பார்த்தேன்..

“கவலைப் படாதே.. உன் நண்பன் இப்போதைக்கு வரமாட்டான்.. நாம் அதற்குள் போய்விட்டு அரைமணி நேரத்தில் திரும்பி விடலாம்” என்று என் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தாள்.

ஏதோ ஒரு இனம்புரியாத அபிமானத்தில் எழுந்து அவளுடன் நடக்க ஆரம்பித்தேன்..

ஒருவேளை நான் போக மறுத்திருந்தால்.. சீறிப்பாயும் அலைகளையும், கடுமையான புயற்காற்றையும் சந்திக்கும் அந்தக் கடல் வாழ்க்கையில் ‘ரோஸானா’ என்ற தென்றலை நான் சந்திக்காமலேயே போயிருப்பேன்..

அது ஒரு வித்தியாசமான சந்திப்பு எனக்கு..

(தொடரும்- .)

பி.கு: சரிசரி.. பிரேஸில் போன மயக்கத்தில புதுசா கவிதை எல்லாம் எழுதலாம்னு தோணுச்சு.. அந்த ‘கிக்’குடன் நான் கிறுக்கியவற்றைப் பார்க்க, என்னுடைய கவிதைப்பக்கம் கொஞ்சம் வந்து பார்த்து திட்டி விட்டுப் போங்களேன்.. முத்துச்சிப்பிகள்- தாரிணி

« Older entries