‘கற்றது கடலளவு’

இது ஒரு பதிவு அல்ல. இனிமேல் வர இருக்கும் ஒரு தொடரின் ‘டிரெய்லர்’..

எனது கப்பல் வாழ்வு குறித்த அனுபவத் தொடர்.. ஏற்கனவே ஜூனியர் விகடனில் ‘கற்றது கடலளவு’ என்ற தலைப்பில் தொடராக வந்தது.. மீண்டும் இப்போது வலைப்பதிவாக…

அந்தத் தொடரிலிருந்து சில ‘சாம்பிள்’ பகுதிகள், உங்களின் பார்வைக்காக..

விரைவில் முழுத் தொடரும் இங்கே இருக்கும்.. அதுவரை சிறிய முன்னோட்டம் மட்டும்..

—————————————————–


தூரத்தில் ஈஃபிள் டவர் பார்வையிலிருந்து மங்கி, காணாமல் போனது. கப்பல் வாழ்க்கையைப் பற்றிய என்னுடைய பல கனவுகளும் அதேபோல் என்னைவிட்டுப் பிரியப் போகின்றன என்பதை நான் அப்போது அறியவில்லை…

———————————————-

எத்தனையோ எதிர்பார்ப்புகளுடனும் உற்சாகத்துடனும் கடல்வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த எனது கற்பனைக் கோட்டைகள் அனைத்தும், பதினைந்து நாள் பயணம் செய்து பிரேஸில் போய்ச் சேர்வதற்குள் அந்த அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் மூழ்கடிக்கப் பட்டன.

———————————————–

பளீரென்று என் கன்னத்தில் அறை விழுந்தது.. மிச்சமிருந்த கொஞ்ச தூக்கமும் காணாமல் போனது. கன்னம் வலிக்க, அதிர்ச்சியுடன் அவனையே பார்த்தேன்.. பார்ட்டியின் போது குடித்திருந்த விஸ்கி அவன் கண்களில் மிச்சமிருந்தது..

————————————————————

படுக்கையில் விழுந்த நான் அதன்பின் தூக்கம் வராமல் நெடுநேரம் விழித்திருந்தேன். இயலாமையால் என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.. எந்த தவறுமே செய்யாததற்கு இந்த தண்டனையா..

————————————————————-

திரைகடலோடியும் திரவியம் தேட வந்தாயிற்று.. மரணம் என்பது எப்போதாவது வந்துதானே ஆகவேண்டும்.. தரையில் வந்தாலென்ன.. அல்லது தண்ணீரில் வந்தாலென்ன.. தடுக்கவா முடியும்..

——————————————–

“ஜோ நீ எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்?”- என்று கேட்டேன்.

உடனே பதில் சொல்லாமல் சிகரெட் புகையை ஆழமாக உள்ளிழுத்தான்..

“கப்பல் வாழ்க்கையை விட்டு எப்போது நிரந்தரமாக நிற்கிறேனோ.. அப்போது”

“எனக்குப் புரியவில்லை”

“நீ ஏன் திருமணம் செய்ய நினைக்கிறாய்?”

“வாழ்க்கைக்கு ஒரு துணை வேண்டாமா?”

அவன் என்னை கேலியாகப் பார்த்துவிட்டு சிரித்தான்.

” கப்பலில் இருந்து லீவில் வீட்டுக்குப் போகும்போது, கல்யாணம் என்ற சிறையில் ஒரு பெண்ணைக் கட்டிப் போட்டுவிட்டு, இரண்டு மாதம் அவளோடு இருந்துவிட்டு, இங்கே ஓடி வந்துவிடுகிறோம்.. அந்தப் பெண்ணின் மனநிலை என்ன பாடுபடும்.. வருஷத்தில் இரண்டுமாதம் கூடவே இருந்துவிட்டு பத்து மாதங்கள் காணாமல் போய்விடுவதற்குப் பெயர் வாழ்க்கைத் துணையா?”- என்று கேட்டான்..

“ஏன் நாமெல்லாம் மனைவியைக் கப்பலுக்கு உடன் அழைத்து வரலாமே” என்றேன்..

————————————————————–

பிரேஸில்… துறைமுகத்துக்குள் நுழையாமல் நங்கூரம் பாய்ச்சி காத்திருந்தது கப்பல்.. படகில் வந்த பெண்கள் எங்கள் கப்பலில் ஏறினார்கள்.. நான் எஞ்ஜின் அறையை விட்டு பார் உள்ள பகுதிக்கு வந்தேன்..

————————————————————–

அந்த மூன்றாவது பெண் எழுந்து என்னருகே வந்தாள்.. விரல்களுக்கிடையே புகையும் சிகரெட்.. இன்னொரு கையில் மதுக்கோப்பை.. விஸ்கியின் நெடி..

அவள் ஜோவின் பக்கம் திரும்பி, என்னைக் கைகாட்டி, “ஜோ.. ஐ லைக் ஹிம் வெரிமச்..” என்றாள்.

ஜோ என் பக்கம் திரும்பி, ” இவளுக்கு உன் மேல் காதல் வந்துவிட்டது.. உனக்குப் பிடித்திருக்கிறதா.. ஒரேயொரு பிரச்னை.. இவள் ஏழுமாத கர்ப்பம்.. பரவாயில்லையா..”-கேட்டுவிட்டு பலமாகச் சிரித்தான்..

அப்போதுதான் அவள் வயிற்றைக் கவனித்தேன்.. அடப்பாவமே.. இந்த நிலையிலும் துணிந்து படகில் வந்திருக்கிறாள்..

————————————————————-

ஏழு மணிக்கு கப்பலை விட்டு இறங்கி தரையில் கால் பதித்தபோது கண்களில் நீர் மறைத்தது நிஜம்..

“என்ன அழுகிறாயா.. முதன்முதலாக கரையில் கால் வைக்கும்போது இப்படித்தான் இருக்கும்..”

“இல்லை ஜோ.. ஏனோ இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை.. கண்டிப்பாக அடுத்த முறை கப்பலுக்கு வரமாட்டேன்”

ஜோ சிரித்தான்.. “எல்லோரும் இதே டயலாக்தான் சொல்கிறார்கள்”..

உண்மைதான்.. அன்று திரும்ப கப்பலுக்கே வரமாட்டேன் என்று கண்ணீர் விட்ட என்னால் கப்பல் வாழ்க்கையை உதற முடிந்ததா..

———————————————————-

ஹோட்டல் பாரில் அந்த புதிய பெண் என் அருகில் இருந்த சேரில் வந்து அமர்ந்தாள்.

“உனக்கு நட்ராஜ் தெரியுமா..”- கேட்டாள்.

“தெரியாது”- என்றேன் நான்.

“நட்ராஜ் என் பெண்ணுக்கு அப்பா”

“ஓ.. உன் கணவனா”

“இல்லையில்லை” என்றாள் அவசரமாக..

“நட்ராஜ் உன்னைப் போல் கப்பலில் வேலை செய்பவர்தான்.. அவர் ஒரு மாலுமி.. பதினைந்து வருடம் முன்பு சந்தித்தேன்.. அவரைப் பார்த்தவுடன் எனக்கு அவருடன் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது.. அவ்வளவுதான்.. பதினைந்து நாளும் அவருடன் தான் இருந்தேன்”

முதலில் ‘இதெல்லாம் என்ன கதை’ என்று தோன்றியது.

“உன் பெயர் என்ன..”

“பத்ரீஷியா.. என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா..?”

எடுத்த எடுப்பிலேயே இப்படித்தானா கேட்பது.. ‘பிடித்திருக்கிறது’ என்று சொன்னால், ‘உன்னிடமும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று கேட்டாலும் கேட்பாளோ என்று நினைத்தேன்… என்னையும் மீறி சிரித்துவிட்டேன்..

‘நினைத்தது நான் தானா’.. கடல் வாழ்க்கை என்னையும் மாற்றத் தொடங்கி விட்டதை நான் உணர்ந்து கொண்ட நிமிடம் அது…

————————————————————-

“இத்தனை வருடங்களாக மற்ற ஆண்கள் தான் எனக்கு டிரிங்க்ஸ் வாங்கித் தந்திருக்கிறார்கள்..ப்ளீஸ்.. என்னை பணம் கொடுக்க அனுமதி.. நான் ஒரு விலைமாதுதான்.. ஆனால் எனக்கும் உணர்வுகள் உண்டு.. இன்று ஒருநாள் நீ என் விருந்தாளியாக இரு..” என்று பத்ரீஷியா என்னைப் பார்த்தாள்..

“உன்னை ஒன்று கேட்பேன்.. மறுக்க மாட்டாயே..” என்று என் முகத்தையே பார்த்தாள்..என்ன கேட்டு வைக்கப் போகிறாள் என்று யோசித்தேன்..

————————————————————–

ரோஸானா கண்களில் ஆர்வத்துடன் என்னைப் பார்த்தாள்..

“நீங்கள் என் டாடியைப் பார்ப்பீர்களா?.. பார்த்தால் கண்டிப்பாக நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.. எனக்கும் வாழ்க்கையில் ஒருமுறையாவது அவரைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.. இந்தியாவையும் தான்”.

நட்ராஜுக்கு இப்படி ஒரு பெண் இருப்பது கூடத் தெரியாது.. இப்போது இந்தப் பெண் இந்தியா போய் ‘டாடி’ என்று கூப்பிட்டால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்..

————————————————————–

அவள் வீட்டிலிருந்து திரும்ப நடந்து வந்து கொண்டிருந்தோம்..

“பத்ரீஷியா.. நீ இவ்வளவு நல்ல மனம் படைத்தவளாக இருக்கிறாய்.. ஏன் இந்த தொழிலை விட்டு விடக்கூடாது..”- என்று கேட்டேன் அவளிடம்..

“அதைவிடு.. நீ கப்பல் வாழ்க்கை பிடிக்கவில்லை என்கிறாய்.. உடனே விட்டுவிடப் போகிறாயா?”

“இல்லை.. இன்னும் சில வருடங்கள் இருந்துவிட்டுத் தான் விலகுவேன்”- நான் பதில் சொன்னேன்..

அவள் திரும்பி என்னைப் பார்த்து சிரித்தாள்..

“இப்போதாவது ஒப்புக் கொள்கிறாயா.. இந்த வேலை பிடிக்கவில்லை என்கிறாய்.. ஆனாலும் பணம் கிடைக்கிறதே என்பதால் விட மாட்டேன் என்கிறாய்.. மனதுக்குப் பிடிக்காத வேலையை பணத்துக்காகச் செய்கிறாய்..

என்னைக் கேட்டால் நீயும் என் போல் தான்.. உனக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.. நான் உடலை விற்கிறேன்.. நீ மனதை விற்கிறாய்.. அதுதான் வித்தியாசம்..ஒருவிதத்தில் இரண்டு பேரும் ஒரே வாழ்க்கைதான் நடத்துகிறோம்.. உன்னுடைய கடல் பாஷையில் சொல்லப் போனால்.. ‘we both are sailing in the same boat’.. இல்லையா..”.

‘சுளீர்’ என்று சவுக்கால் அடித்த உணர்வு.. எவ்வளவு பெரிய வார்த்தைகள்..

‘பணத்துக்காக மானத்தை மட்டுமல்ல.. மனதை விற்பதும் விபசாரம்தான்..’

எனக்கு பதில் சொல்ல முடியவில்லை.. அதன்பின் எத்தனையோ நாடுகளையும், மக்களையும் சந்தித்து விட்டாலும், என் மனதில் பிரேஸிலின் ‘மடீரா’ துறைமுகத்தின் நினைவுகள் மட்டும் மங்காமல் இருந்தன.. பத்ரீஷியாவின் அந்த வார்த்தைகள் என் மனதை துளைத்துக் கொண்டே இருந்தன..

ஆனால் நான்கு வருடங்களுக்குப் பின் மீண்டும் அங்கே சென்றபோது.. பத்ரீஷியாவுக்கு அப்படி ஒரு முடிவு ஏற்படும் என்றும், ரோஸானாவை அப்படி ஒரு நிலையில் சந்திப்பேன் என்றும் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை..

« Older entries